இரக்கமற்ற இந்திய முதலாளிகள் : லே ஆஃப் குறித்து ரத்தன் டாடா கண்டனம்

--

டில்லி

கொரோனா தாக்கம் உள்ள நேரத்தில் லே ஆஃப் அறிவிக்கும் இந்திய முதலாளிகளுக்கு டாடா குழும முன்னாள் தலைவர் ரத்தன் டாடா கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக நாடெங்கும் கொரோனா பரவுதல் அதிகமாக உள்ளதால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது  இதையொட்டி பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு லே ஆஃப் அறிவித்து ஊதியம் அளிக்காமல் உள்ளன.   லே ஆஃப் என்றால் நோ ஒர்க் நோ பே, அதாவது வேலை அற்ற நாட்களில் ஊதியம் இல்லை என்னும் அடிப்படை பின்பற்றப் படுவதால் லட்சக்க்ணக்கோனார் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் விதி விலக்காக இந்தியாவின் புகழ்பெற்ற நிறுவனமான டாடா குழுமத்தில் ஊழியர்கள் யாருக்கும் லே ஆஃப் அளிக்கப்படவில்லை.  ஆனால் உயர் அதிகாரிகளின் ஊதியத்தில் 20% குறைக்கப்பட்டுள்ளது.

டாடா குழும முன்னாள் தலைவர் ரத்தன் டாடா ஒரு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ”நீங்கள் லே ஆஃப் அளித்து ஊதியத்தைப் பறித்தவர்கள் உங்களுக்காக உழைத்து வாழ்நாள் முழுவதும் பணி புரிபவர்கள்.  நீங்கள் இந்த கொரோனா நேரத்தில் அவர்களை இரக்கமில்லாமல் நட்டாற்றில் விடுவது தொழில் தர்மமா?

ஒருநிறுவனம் தன் ஊழியர்களின் நலன் மீது அக்கறை செலுத்தவில்லை என்றால் வெற்றியடைய முடியாது.  இந்த கொரோனா வைரஸ் யாராக இருப்பினும், எந்த உயரத்தில் இருப்பினும் தாக்கக் கூடும்.  எதெல்லாம் சரி, எதெல்லாம் நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதையெல்லாம் மாற்றாவிட்டால் பிழைக்க முடியாது.

முதலாளிகள் எல்லோரும் லாபத்தை நோக்கி ஓடுகின்றனர்.  என்றாலும்  அந்த பயணம் எவ்வளவு நெறியானது என்பதைப் பார்க்க வேண்டும். பணம் சம்பாதிப்பது மட்டும் தொழில் அல்ல.  மாறாக வாடிக்கையாளர்களுக்கும், ஊழியர்கள் உள்ளிட்ட நிறுவனம் செயல்பட உதவியவர்களுக்கும் சரியானதை செய்வதே தொழில் ஆகும்.

அவ்வப்போது தவறுகள் நேர்வது தொழிலில் சகஜம் தான்.   அதே வேளையில் ஒவ்வொரு முறையும் சரியான முடிவை எந்த ஒரு நெருக்கடிகள் நேர்ந்தாலும் எடுக்க வேண்டியது முக்கியம்.

கொரோனா காலத்தில் நான் இழந்தது ஆடம்பரங்களையும், சொகுசுக் கப்பல் பயணங்களையும், உல்லாசங்களையும் என்பது சரியான பதில் அல்ல. என்னை பொறுத்தவரை ஒத்த சிந்தனைகள் கொண்டு உறுதியோடு நிற்பவர்களுடன் பேசி மகிழ்வதைத் தான் இந்த பெருந்தொற்று காலத்தில் இழந்திருப்பதாக உணர்ந்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.