நேற்று மாலை இந்திய கிரிக்கெட் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி அறிவிக்கப்பட்டதற்கு டிவிட்டர் பதிவர்கள் வரவேற்று புகழாரம் சூட்டுகின்றனர்.

நேற்று காலை முதலே ரவி சாஸ்திரிதான் இந்திய கிரிக்கெட் பயிற்சியாளராக வருவார் என ஊடகங்களில் செய்திகள் வரத் தொடங்கின.  ஆனால் இந்திய கிரிக்கெட் கண்ட்ரோல் போர்ட் அதை அதிகாரபூர்வமாக பின்னர் அறிவிப்பதாக கூறிவிட்டது.   பிறகு மாலையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.  ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராகவும், அவருக்கு உதவியாக ஜகீர் கான் மற்றும் ராகுல் திராவிட் இருப்பார்கள் எனவும் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானது.  ஜகீர்கான் பவுலிங் கோச்சாகவும், பேட்டிங்க் கன்சல்டண்டாக ராகுல் திராவிடும் இருப்பார்கள் என அந்த அறிவிப்பு தெரிவித்துள்ளது.

இந்த செய்தி பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டின் டிவிட்டர் வலை தளத்தில் வெளியானது முதல் டிவிட்டர் பதிவர்கள் பலர் இந்த வரவேற்பை வரவேற்று ரவி சாஸ்திரிக்கும் மற்ற இருவருக்கும் வாழ்த்துக்களை பதிய ஆரம்பித்தனர்.

அது மட்டுமின்றி தங்களின் டிவிட்டர் பக்கங்களிலும், ரவி, ஜகீர் மற்றும் ராகுலின் டிவிட்டர் பக்கங்களிலும் வாழ்த்துக்கள் குவியத் தொடங்கின.

பிசிசிஐ தனது அறிவிப்பில் “ரவி சாஸ்திரி ஏற்கனவே அணி இயக்குனராக இருந்தவர்.  அவர் விளையாடும் போதும், பயிற்சியாளராகவும் அணிக்கு பல வெற்றிகளை தேடித் தந்தவர்.   ஜகீர் சமகால விளையாட்டு வீரர்.  அவர் இளைய தலைமுறை ஃபாஸ்ட் பவுலர்களுக்கு வீரர்களின் திறமையை மேலும் பளிச்சிடும் அளவுக்கு பயிற்சி அளிப்பார்.  வரும் ஆண்டுகளில் இந்தியா பல நாடுகளில் டெஸ்ட் மேட்ச் விளையாட உள்ளது.  அதற்கு ராகுலின் அனுபவம் வாய்ந்த பேட்டிங் பயிற்சி அத்தியாவசியமானது” என தெரிவித்துள்ளது