மும்பை: பிசிசிஐ அமைப்பின் தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றதானது, இந்திய கிரிக்கெட்டின் ஒரு வெற்றிகரமான தருணம் என்று கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

யாரும் எதிர்பாராத வகையில், பிசிசிஐ அமைப்பின் தலைவராக போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார் கங்குலி. இவரின் தேர்வுக்குப் பின்னால் மத்திய அரசின் செல்வாக்கு உள்ளதென்றும் கூறப்படுகிறது. ஆனால், இதை சம்பந்தப்பட்டவர்கள் மறுத்து வருகின்றனர்.

ரவி சாஸ்திரிக்கும், கங்குலிக்கும் கடந்த காலங்களில் பல விஷயங்களில் சுமூகமான உறவு இருந்ததில்லை. கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டியின் உறுப்பினராக கங்குலி பதவி வகித்த காலத்திலிருந்தே அவர்களுக்கிடையிலான மோதல் இருந்து வருகிறது.

இந்நிலையில், பிசிசிஐ அமைப்பின் தலைவராக கங்குலி பொறுப்பேற்றுள்ள நிலையில், அதுகுறித்து ரவிசாஸ்திரி என்னமாதிரியான கருத்து தெரிவிப்பார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், “பிசிசிஐ அமைப்பின் தலைவராக கங்குலி பொறுப்பேற்றிருப்பது இந்திய கிரிக்கெட்டிற்கான ஒரு வெற்றிகரமான தருணம். அவர் ஒரு இயல்பான தலைவர். இந்தியக் கிரிக்கெட் மேலும் மேலும் முன்னேற்றப் பாதையில் செல்வதற்கான ஒரு தொடக்கமாக இது அமைந்துள்ளது” என்றுகூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.