விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார் அவர்களின் முகநூல் பதிவு:

லைஞர் குறித்து தமிழ் இந்து நாளேட்டுக்காக நான் அனுப்பிய கருத்து இது. நாளேட்டில் இடப் பற்றாக்குறை காரணமாக எடிட் செய்து போட்டிருக்கிறார்கள். அதை இங்கே தருகிறேன்.

” 2006 தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் வெற்றிபெற்று சட்ட மன்ற உறுப்பினரானேன்.
ஒரு ஆலோசனையை எவர் சொன்னாலும் அது மக்களுக்குப் பயனளிக்கும் என்றால் அவர் சார்ந்திருக்கும் கட்சி எது என்று பார்க்காமல் அதை நிறைவேற்றத் தயங்காதவர் தலைவர்கலைஞர். அதுதான் அவரைத் தமிழ்நாட்டின் சிறந்த முதல்வர்களில் ஒருவராக மட்டுமின்றி தேசிய அளவில் முக்கியமான தலைவர்களில் ஒருவராகவும் ஆக்கியிருக்கிறது. அவரது அவையில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து நான் முன்வைத்த கோரிக்கைகள், பலவற்றை அவர் செயல்படுத்தினார். நரிக் குறவர், அரவாணிகள், புதிரை வண்ணார், வீட்டுப் பணியாளர், நாட்டுப்புறக் கலைஞர், ஓமியோபதி மருத்துவர் – என ஆறு நல வாரியங்கள் எனது கோரிக்கையின் அடிப்படையில் அவரால் உருவாக்கப்பட்டன. ஈழத் தமிழ் அகதிகளுக்கு வழங்கப்பட்டுவந்த பணக் கொடையை இரு மடங்காக உயர்த்தியதோடு, அனைத்து நலத் திட்டங்களையும் அவர்கள் பெறுவதற்கும் எனது கோரிக்கை வழிவகுத்தது.

தொழில் துறை அவரது பொறுப்பில் இருந்தபோது, இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். அடுத்த பட்ஜெட்டிலேயே அதை அறிவிப்பாக வெளியிட்டார். இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் செய்யாத வகையில் மின்னணுக் கழிவுக் கொள்கையை உருவாக்குவதற்கும் நான் முன்வைத்த வேண்டுகோள் காரணமாக அமைந்தது. எல்லாவற்றுக்கும் சிகரமாக குடிசைகள் இல்லாத தமிழகத்தை உண்டாக்க வேண்டும் என்ற எனது வேண்டுகோளை ஏற்று, 22 லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டுவதற்கான ‘கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை’ அவர் அறிவித்தார்.

சட்ட மன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்குக் காதுகளையும் மனதையும் திறந்துவைத்திருந்தவர் அவர். அதனால்தான் அவரை எதிர்த்தவர்களின் பலமும் அவருக்குள் சேர்ந்துகொண்டது.

கலைஞர் என்ற ஆளுமை பன்முக ஆற்றலின் வெளிப்பாடு மட்டுமல்ல, கடின உழைப்பின் அடையாளம் மட்டுமல்ல, போர்க்குணத்தின் குறியீடும் கூட. சமூகப் பாகுபாட்டின் வலி என்னவென்று ஆழமாக உணர்ந்தவர் அவர். அதனால்தான், வகுப்புவாதிகளுக்கு அவர் இப்போதும் ஒரு கொடுங்கனவாகவே திகழ்கிறார்.

அவர் தமிழரே இல்லை என்று சொன்னவர்கள் எத்தனையோ பேர். ஈழத் தமிழரின் துரோகி என்று வசைபாடியவர்கள் எத்தனையோ பேர். ஆனால், தமிழ் மொழிக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் அவர் அளவுக்குப் பங்களிப்பு செய்த இன்னொரு அரசியல் தலைவரை நாம் சுட்டிக்காட்டவே முடியாது. நவீனக் கலைவடிவங்களானாலும் சரி, செவ்விலக்கியப் பிரதிகள் ஆனாலும் சரி அவரைத் தவிர்த்துவிட்டு அந்தத் துறைகளின் சாதனைகளைப் பேச முடியாது.

அவர் முதல்வராக இருந்த அவையில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அந்தக் காலத்தைத்தான் தமது அரசியல் வாழ்வில் மதிப்பு மிக்கக் காலமாகக் கருதுவார்கள். எனக்கும் அப்படித்தான்.

அவரது ஆட்சியில், லட்சக் கணக்கான மக்கள் பயன்பெறக்கூடிய திட்டங்கள் உருவாக நானும் ஒரு கருவியாக இருந்தேன் என்பதைவிட பெரிய அங்கீகாரம் வேறென்ன இருக்கமுடியும் . அந்தப் பெருமையைத் தந்த தலைவர் கலைஞரை நன்றியோடு நினைத்துக்கொள்வதைத்தவிர வேறென்ன செய்யமுடியும்? ”