டில்லி,

கிராமபுற வங்கிகள் தங்கள் பகுதிகளில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் ரூ.500 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் வைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

பண மதிப்பிழப்பு குறித்து, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் பணப்புழக்கம் குறைந்து பணத்தட்டுபாடு நிலவி வருகிறது.

புதியதாக வெளியிட்ட ரூ.2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளும் போதிய அளவு வெளியிடாமல், பணமற்ற பரிவர்த்தனை செய்ய மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

மேலும், ஏடிஎம் இயந்திரங்களில் ரூ.2000 புதிய நோட்டு மட்டுமே வைக்கப்பட்டு வருகிறது. 500 ரூபாய் நோட்டுக்கள் தட்டுப்பாடாகவே உள்ளது.

பொதுமக்கள் பணத்திற்காக வங்கி மற்றும் ஏடிஎம் வாசலிலும், கிடைக்கும்  பணத்திற்கு தேவை யான சில்லறையை தேடி அவதிப்படுகிறார்கள்.

இந்நிலையில், பணத்தட்டுப்பாடு குறித்து அனைத்து வங்கிகளுக்கும் மத்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதில், அனைத்து வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களிலும் குறைந்தபட்சமாக 40 சதவிகிதம் ரூ.500 ரூபாய் நோட்டு வைக்கப்பட வேண்டும் என்றும், குறிப்பாக கிராமப்புற வங்கிகளில் ரூ.500 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள்  ஏடிஎம் இயந்திரங்களில் வைப்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், கிராமப்புறங்களில் உள்ள மக்களின் தேவைகளை அங்குள்ள வங்கிகள் நிறைவேற்ற வில்லை என்றும்,  ஆகவே கிராமப்புற வங்கிகளில் முன்னுரிமை அடிப்படையில் ரூ.500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் வைக்க கருவூலங்களுக்கு அறிவுறுத்தும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுபோல் எத்தனையோ உத்தரவுகளை ரிசர்வ் வங்கி தெரிவித்தும், எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஆகவே இந்த ஆர்பிஐ உத்தரவை வங்கிகள் நடைமுறை படுத்துமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஏனென்றால் சென்னை போன்ற மாநகரங்களிலேயே  பல ஏடிஎம் இயந்திரங்கள் இன்றுவரை செயல்படாமல் மூடப்பட்டே உள்ள நிலையில், கிராமப்புற ஏடிஎம் இயந்திரங்களில் பணம் வைக்க வங்கிகளை, ஆர்பிஐ வலியுறுத்தி உள்ளது கேலிக்குறியதாகவே கருதப்படுகிறது.

மாதத்தின் தொடக்கமான தற்போது,  மக்கள் பணத்துக்கு தொடர்ந்து திண்டாடிக்கொண்டிருப்பது அதிகாரிகளின் கண்களுக்கு இன்னும் தெரியவில்லைபோலும்….