டில்லி

டிஎம் களில் ரூ. 5000க்கு அதிகமாகப் பணம் எடுப்போரிடம் கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கிக்கு ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு எப்போது தேவைப்பட்டாலும் பணம் எடுத்துக் கொள்ள வசதியாக உருவாக்கப்பட்டது ஏடிஎம் ஆகும்.    இதனால் வங்கி ஊழியர்களின் பணிச்சுமை குறையும் எனவும் அவர்கள் வேறு பணிகளைக் கவனிக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.  இதையொட்டி பல வங்கிகள் ஏடிஎம் பயன்பாட்டை உபயோகப்படுத்த வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டது.

அதன் பிறகு ஏடிஎம்களில் குறிப்பிட்ட தடவைகளுக்கு மேல் பணம் எடுப்போருக்குக் கட்டணம் வசூலிக்கப்பட்டது.  இதற்கு எதிர்ப்பு எழுந்ததால் அந்தந்த வங்கி ஏடிஎம் களில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம் எனவும் மற்ற வங்கிகளில் குறிப்பிட்ட தடவைகள் மட்டுமே பணம் எடுக்க வேண்டும் எனவும் மாற்றப்பட்டது

இந்நிலையில் கடந்த வருடம் ரிசர்வ் வங்கி ஒரு குழுவை அமைத்து ஏடிஎம் கட்டணங்கள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.  அந்தக்குழு அளித்துள்ள அறிக்கையில் ஏடிஎம் களில் பணம் எடுக்கும் உச்சவரம்பை ரூ.5000 ஆக மாற்றவும் ஒரே முறை அதற்கு மேல் எடுப்பவர்களிடம் கட்டணம் வசூலிக்கவும்  ஆலோசனை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் அந்த அறிக்கையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் நகர வங்கி ஏடிஎம்களில் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணத்தில் 16% உயர்வைப் பரிந்துரை செய்துள்ளது.    அதே நிலையில் 10 லட்சத்துக்குக் குறைவானோர் வசிக்கும் நகரங்களுக்கு 24% கட்டண உயர்வையும் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது பணப்பரிவர்த்தனைகளுக்கு ரூ. 2க்கு பதில் ரூ.17 ஆகக் கட்டணம் வசூலிக்கலாம் எனவும் பணமல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ. 5லிருந்து ரூ.7 ஆக கட்டணம் வசூலிக்கலாம் எனவும் ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆலோசனைகளை ரிசர்வ் வங்கி ஏற்றுக் கொண்டுள்ளதா என்பது குறித்து எவ்வித தகவலும் இதுவரை வரவில்லை.