டில்லி

புதிய ரூ.1000 நோட்டுக்கள் வெளியிட உள்ளதாக வந்த செய்திகளை வதந்தி என ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.

கடந்த 2016 ஆம் அண்டு நவம்பர் 8 ஆம் தேதி இரவு பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்ததால் ரூ. 500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் திடீரென செல்லாதவை ஆகின.    இந்த நோட்டுக்களை மாற்ற மக்கள் வரிசையில் மணிக்கணக்கில் காத்திருக்க நேரிட்டதும் இதில் உயிரிழப்பு நேரிட்டதும் பலரது கண்டனத்துக்குள்ளானது.

செல்லாததான ரூ. 500க்கு பதில் புதிய ரூ. 500 நோட்டுக்கள் வெளியிடப்பட்டன.  ஆனால் ரூ. 1000 மதிப்பில் புதிய நோட்டுக்கள் வெளியிடப்படாமல் அதற்குப் பதிலாக புதிய ரூ.2000 நோட்டுக்கள் வெளியிடப்பட்டன.   தற்போது அந்த புதிய ரூ.2000 நோட்டுக்களும் அதிக அளவில் புழக்கத்தில் இல்லை.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி புதிய ரூ.1000 நோட்டுக்களை வெளியிட உள்ளதால் ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.    அத்துடன் புதிய ரூ.1000 நோட்டுக்கள் எனப் புகைப்படங்களும் வெளியாகி அவை சமூக ஊடகங்களில் பலராலும் பரப்பப்பட்டன.  ஒரு சில செய்தி ஊடகங்களிலும் இந்த செய்தி வெளியாகியது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி இந்த தகவலை மறுத்துள்ளது.  ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரிசர்வ் வங்கி புதிய ரூ.1000 நோட்டுக்களை வெளியிட உள்ளதாக சமூக வலைத் தளங்களில் தவறான வதந்தி பரவி வருகிறது.  இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்.  இந்த செய்தியுடன் உள்ள புகைப்படம் பொய்யானது.   இந்த புகைப்படத்தை ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.