ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி விலகவேண்டும்: வங்கி யூனியன் தலைவர் தாக்கு

அகிக இந்திய வங்கி அலுவலர் கூட்டமைப்பின் துணை தலைவர் தாமஸ் ப்ரான்கோ, ரூபாய் நோட்டு தடையால் நடந்து கொண்டிருக்கும் அத்தனை குழப்பங்களுக்கும், இழப்புகளுக்கும் தார்மீகப் பொறுப்பேற்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளார்.

franco

கடந்த 12 நாட்களாக வங்கி ஊழியர்கள் சக்கையாக பிழிந்தெடுக்கப்படுகிறார்கள். வேலைப்பளு தாங்க முடியாமல் இதுவரை 11 வங்கி ஊழியர்கள் இறந்தே விட்டார்கள். ஒரு மனிதன் 16-18 மணிநேரம் தொடர்ந்து எப்படி வேலை செய்ய இயலும்? அப்படி வேலை செய்பர்களுக்கு அரை நாள் விடுப்பு கூட தரப்படுவதில்லை.

இது முழுக்க முழுக்க எந்த ஒழுங்கான முன்னேற்பாடும் இல்லாமல் செய்யபட்ட மிக மிக மோசமான சொதப்பல் நடவடிக்கை. பிரதமர் மோடியோ அல்லது நிதியமைச்சர் அருண் ஜெட்லியோ பொருளாதார வல்லுநர்கள் அல்ல. ஆனால் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு இது தெரியாதா? அவர் தனது பங்கை ஆற்றுவதில் முழு தோல்வியடைந்துவிட்டார். இதனால் நாடு ஒரு மோசமான இக்கட்டில் மாட்டிகொண்டுவிட்டது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும்.

500, 1000 நோட்டுக்களை தடை செய்தவர்கள் ஏன் 2000 நோட்டை அச்சடிக்க வேண்டும்? 500 ரூபாய் நோட்டை அச்சிட அவர்களுக்கு என்ன பிரச்சனை? புழக்கத்தில் இருக்கும் 1000 ரூபாய் நோட்டை விட 2000 ரூபாய் நோட்டு சிறிதாக இருப்பது அதில் கையெழுத்திட்ட ரிசர்வ் வங்கி கவர்னருக்கும் அவர் குழுவுக்கும் தெரியாதா? இந்த தவறு நாடு முழுவதும் இருக்கும் கிட்டத்தட்ட 2 லட்சம் ஏடிஎம்களை மறுகட்டமைப்பு செய்ய வழி செய்திருக்கிறது.

இந்திய பொருளாதாரம் எப்படி இயங்குகிறது? பணப் பரிவர்த்தனை எப்படி மேற்கொள்ளப்படுகிறது என்பதன் அடிப்படையே புரியாதவர்கள் எடுத்த நடவடிக்கை இது. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார அதிகார மையம் செயலற்று கிடக்கிறது. நாட்டின் பொருளாதாரச் செயலர் அமைதியாக இருக்கும் போது பொருளாதார விவகாரங்களின் செயலர் சக்திகாந்ததாஸ் விரலில் மை வைப்பது உட்பட ஏதேதோ திட்டங்களை அறிவித்துக்கொண்டிருக்கிறார்.

கிட்டத்தட்ட 10 லட்சம் கோடி முதலீட்டை வைத்துள்ள கூட்டுறவு வங்கிகளுக்கு பணம் மாற்ற தடை விதிக்கப்பட்டது எந்த மாதிரியான நடவடிக்கை? அந்த வங்கிகள்தான் நாட்டின் பட்டி தொட்டியெல்லாம் இருக்கின்றன. அவற்றில் பணம் மாற்ற முடியாது என்றால் ஏழை கிராம
மக்கள் எங்கே போய் பணத்தை மாற்றுவார்கள்?

இந்திய பொருளாதாரம் மூழ்கிக்கொண்டிருக்கிறது. வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த காயம் ஆற 12 முதல் 15 மாதங்கள் ஆகலாம் என்று தாமஸ் ப்ரான்க்கோ கருத்து தெரிவித்துள்ளார்.