ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலி: கடன் தவணைகளுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் அளிக்க ஆர்பிஐ முடிவு

--

டெல்லி: கடன் தவணைகளுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் அளிக்க ஆர்பிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதார நிலைமை பெரும் சரிவை கண்டது. இதையடுத்து, வங்கிக் கடன் வாங்கியவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கடன் தவணைகளுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் அளித்து ஆர்பிஐ சலுகை அறிவித்தது.

தற்போது ஊரடங்கு 4ம் கட்டமாக நாடு முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால் கடன் தவணைகளுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் அளிக்க ஆர்பிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பான தகவலை எஸ்பிஐயின் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது. மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கி தற்காலிக தடை மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று எஸ்பிஐ அறிக்கை தெரிவிக்கிறது.

ஆகஸ்ட் 31, 2020 வரை நிறுவனங்கள் பணம் செலுத்தத் தேவையில்லை, மேலும் மூன்று மாதங்களுக்கு விலக்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், எனவே, தற்போதுள்ள கடன்களின் விரிவான மறு சீரமைப்பிற்கும், 90 நாள் விதிமுறைகளை மறுவடிவமைப்பதற்கும் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு செயல்பாட்டு தளர்வுகளை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.