டில்லி

ணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு இருந்ததை விட இப்போது அதிக மதிப்பில் நோட்டுக்கள் ரிசர்வ் வங்கி அச்சடித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி அன்று பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்து ரூ.500 மற்றும் ரூ.1000  நோட்டுக்கள் செல்லாதவை ஆகின.  அதையொட்டி புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டன.    அந்த சமயத்தில் போதுமான அளவு புதிய நோட்டுக்கள் இல்லாததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

ரிசர்வ் வங்கி நோட்டுக்களைப் பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் பி லிமிடெட் மற்றும் செக்யூரிடி பிரிண்டிங் மற்றும் மிண்டிங் கார்பொரேஷன் மூலம் அச்சடித்து வருகிறது.   இந்த இரு நிறுவனங்களில் இருந்தும்  பணமதிப்பிழப்புக்கு பிறகு அச்சடிக்கப்பட்ட நோட்டுக்கள் எண்ணிக்கை மற்றும் மதிப்பு  ஆகியவற்றை ரிசர்வ்  வங்கி  வெளியிட்டுள்ளது

அதன்படி கடந்த 2016-17 ஆம் ஆண்டு ரூ13.39 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.   அதன் பிறகு 2017-18 ஆம் வருடம் ரூ.6.25 லட்சம் கோடி மதிப்பிலான  நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.  சென்ற ஆண்டு அதாவது 2018-19 ஆம் ஆண்டு ரூ.7.26 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அத்துடன் கடந்த 2016-17 ஆம் வருடம் ரிசர்வ் வங்கி நோட்டுக்கள் அச்சடிக்க ரூ. 7,968 கோடி செலவிட்டுள்ளது   அப்போது 2904.3 கோடி நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.   ஆனால் 2018-19 ஆம் வருடம் 2919.1 கோடி நோட்டுக்கள் அச்சடிக்க ரூ.4,817 கோடி மட்டுமே செலவாகி உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் குறைந்த மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள்  அச்சடிக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.   அதாவது கடந்த 2016-17 ஆம் வருடம் அச்சடிக்கப்பட்ட நோட்டுக்களில் ரூ.2000 நோட்டுக்கள் 52.3% ஆக இருந்துள்ளன.   அதே வேளையில் 2018-19 ஆம் வருடம் 1.3% நோட்டுக்கள் மட்டுமே ரூ.2000  நோட்டுக்களாக இருந்துள்ளன.

தைவிட குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் கடந்த மார்ச் மாதம்  அதாவது பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு மார்ச் 2016 ஆம் வருடம் மொத்தம் ரூ.16.415 லட்சம் கோடி மதிப்பிலான  நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்துள்ளன.  ஆனால் 2019 ஆம் வருடம் மார்ச் மாதம் ரூ.21.109 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன.   தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனையை முன் நிறுத்தி வரும் மோடி அரசு இவ்வாறு அதிக அளவில் நோட்டுக்கள் அச்சடித்தது குறித்து எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.