15% அதிகம்: கடந்த நிதியாண்டில் 6,801 வங்கி மோசடிகள்! ரிசர்வ் வங்கி தகவல்

டெல்லி:

டந்த நிதியாண்டில் மட்டும் 6,801 வங்கி மோசடிகள் நடைபெற்று இருப்பதாக இந்திய  ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டு உள்ளது. இது 15 சதவிகிதம் அதிகம் என்று தெரிவித்து உள்ளது.

வங்கி மோசடிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த நிதியாண்டில் (2018-19) மட்டும் 6,801 வங்கி மோசடி சம்பவங்கள் நடந்துள்ளது என்றும் வாராக்கடன்கள் வசூலிப்பது அதிகரித்து உள்ளது என்றும்  இந்திய ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

வங்கிகள் கடன் வாங்கிக்கொண்டு ஏமாற்றுபவர்களில் பெரும் தொழிலதிபர் உள்பட சாதாரண மக்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. வங்கிகள்  எவ்வளவு விழிப்பாக நடந்து கொண்டாலும், பாதுகாப்பான டிஜி்ட்டல்  பரிவர்த்தனையை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்தாலும் அவற்றை ஏமாற்றி மோசடிகளில் ஈடுபடுவதும் அதிகரித்தே வருகின்றன.  சில மோசடிகளுக்கு ஒரு சில வங்கி பணியாளர்களும் உடந்தையாக இருக்கின்றனர்.  மத்திய குற்றப்பிரிவில் உள்ள வங்கி மோசடி தடுப்பு பிரிவு காவல்துறையும் அமைத்து கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில், வங்கி மோசடி சம்பவங்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கி அண்மையில் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அதில், கடந்த 2018-19ம் நிதியாண்டில் அளவு மற்றும் மதிப்பு அடிப்படையில் வங்கி மோசடிகள் முறையே 15 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்து உள்ளது.

2018-19ம் நிதியாண்டில் மொத்தம் ரூ.71,543 கோடி மதிப்புக்கு 6,801 வங்கி மோசடிகள் நடந்துள்ளது. 2017-18ம் நிதியாண்டில் மொத்தம் ரூ.41,167 கோடி மதிப்புக்கு  5,916 வங்கி மோசடி சம்பவங்கள் நடந்து உள்ளதாகவும் கூறி உள்ளது.

இதுபோன்ற வங்கி மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளது என்ற கவலைக்குரிய செய்தி என்று தெரிவித்துள்ள ரிசர்வ் வங்க,  தொடர்ந்து 7 ஆண்டுகளாக அதிகரித்து வந்த வங்கிகளின் வாராக் கடன் தற்போது குறைந்துள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

2019 ம் ஆண்டு மார்ச் இறுதி நிலவரப்படி வங்கிகளின் மொத்த வாராக் கடன் 9.1 சதவீதமாக குறைந்துள்ளது. 2018 மார்ச் இறுதியில் வங்கிகளின் வாராக் கடன் 11.2 சதவீதமாக உயர்ந்து இருந்தது.

வாராக் கடனை வசூலிக்க வங்கிகள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையை இதற்கு காரணம் என்றும் தெரிவித்து உள்ளது.

You may have missed