முதியவர்கள், மாற்று திறனாளிகள் வீடு தேடிசென்று வங்கி சேவை: ரிசர்வ் வங்கி

டில்லி,

70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்களின் வீடுகளுக்கே சென்று வங்கி சேவை அளிக்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும், இந்திய ரிசர்வ் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த சேவையை அமல்படுத்த  வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றதில் இருந்து டிஜிட்டல் வாயிலான சேவையை ஊக்கப்படுத்தி வருகிறது. அனைத்து வகையான பரிவர்த்தனைகளும் வங்கிகள் மூலமே நடைபெற வேண்டும் என வற்புறுத்தி வருகிறது.

இந்நிலையில், மூத்த குடிமக்கள்,  பார்வை குறைபாடு உள்ளவர்கள், மாற்று திறனாளிகள் போன்றவர்களுக்கு பணம் போடுதல், எடுத்தல் போன்ற வங்கி சேவைகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று அளிக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

மேலும், சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் மேற்கண்டவர்கள் தேவைக்கேற்ப குறைந்த பட்சம் 25 காசோலைகள் வழங்க வேண்டும் என்றும், அதை நேரிலேயே வழங்க வேண்டும் என்றும், அவர்களை வங்கிக்கு வரும்படி அலைக்கழிக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த சேவைகள் அனைத்தும் அடுத்த மாதத்திற்குள் (டிசம்பர் 31) செயல்படுத்த வேண்டும் வேண்டும் என்றும் குறிப்பிடப்ப்டடுள்ளது.