டில்லி:

ந்திய ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக (டிவிடென்ட்)  ரூ.28,000 கோடிவழங்க தீர்மானித்துள்ளது. நேற்று நடைபெற்ற  ரிசர்வ் வங்கி யின் மத்தியக் குழு கூட்டத்தில் அதற்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே  ரிசர்வ் வங்கியின் கையிருப்பான ரூ.9.59 லட்சம் கோடி நிதியில் இருந்து மத்திய அரசுக்கு ரூ.3.6 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது. இதற்கு ரிசர்வ் வங்கி மறுத்த நிலையில், மத்திய அரசின் தொல்லை காரணமாக ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்ட சென்றதாகவும் கூறப்பட்டது.  இந்த விவகாரம்  சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி யினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், நேற்று நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடை பெற்ற  ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழு கூட்டத்தை தொடர்ந்து, மத்திய அரசுக்கு இடைக்கால ஈவுத்தொகை (டிவிடென்ட்) வழங்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொருளாதார தணிக்கை மற்றும் மூலதன கட்டமைப்பு நடைமுறைகளின் அடிப்படையில், கடந்த 2018, டிசம்பர் 31ம் தேதி வரையிலான 6 மாதங்களுக்குரிய ஈவுத்தொகையாக ரூ.28,000 கோடியை மத்திய அரசுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும், கடந்த 2017-18 (ஜூலை-ஜூன்) நிதியாண்டில் ஈவுத்தொகையாக மத்திய அரசுக்கு ரூ.30,663 கோடியை ரிசர்வ் வங்கி வழங்கியிருந்த நிலையில், தற்போது இரண்டாவது ஆண்டாக உபரித் தொகையை ரிசர்வ் வங்கி வழங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.