டில்லி

ணமதிப்புக் குறைப்பினால் பிரயோஜனம் இல்லை எனவும் வேறு யோசனைகளை அரசு ஏற்கவில்லை எனவும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இந்த பணமதிப்புக் குறைப்பை கடந்த வருடம் நவம்பர் மாதம் அறிவித்த போது,  கருப்புப் பணத்தை வங்கிகளில் மாற்ற முடியாததால், கருப்புப் பணம் முற்றிலுமாக ஒழிக்கப் பட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.   ஆனால் கடந்த வாரம் வெளியான ரிசர்வ் வங்கியின் அறிக்கைப் படி 99% சதவீதம் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் வங்கியில் மாற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்.  இவர் தான் எழுதியுள்ள ஆங்கிலப் புத்தகமான ”சீர்திருத்தங்களுக்காக நான் செய்ய வேண்டியதை செய்துள்ளேன்” என்னும் நூலை அடுத்த வாரம் வெளியிட உள்ளார்.  சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் ரகுராம் ராஜன் கலந்துக் கொண்டு பேசி உள்ளார்.

அவர் ”நான் ஏற்கனவே கருப்பு பணத்தை ஒழிக்க பணமதிப்புக் குறைப்பு சரியான நடவடிக்கை இல்லை, எனவும்   அது தற்காலிகமாக நன்மைகளை கொடுத்தாலும்,  வெகு நாளைக்கு அது தொடராது எனவும் ரிசர்வ் வங்கி மூலமாக அறிவித்து உள்ளேன்.   வேறு சில யோசனைகளையும் ரிசர்வ் வங்கி அரசுக்கு அளித்திருந்தது.   ஆனால் எதையும் மத்திய அரசு ஏற்கவில்லை.

நான் பதவியில் இருந்த காலமான 2016ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 5  வரை பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கை எடுப்பதைப் பற்றி மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு எந்தத் தகவலும் அளிக்கவில்லை.   சில விதத்தில் இந்த நடவடிக்கை மிகவும் புத்திசாலித்தனமான நடவடிக்கைதான் எனினும், தற்போதைய நிலையை பார்க்கும் பொழுது இதனால் எந்த பொருளாதார முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதே உண்மை” என கூறி உள்ளார்.