பெங்களூரு:

நேற்று பெங்களூரில் நடைபெற்ற போட்டியின் இறுதி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு காரணமாக மலிங்கா வீசிய பந்து பல்வேறு சர்ச்சைகைளை உருவாகி உள்ளது. மலிங்காவின் பந்து, நோ பால் என்ற நிலையில், அதை அம்பையர்கள் கவனிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுந்துள்ளது.

 நேற்று  பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 7 லீக் ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில், முதலில் பேட் செய்த  மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து பெங்களூரு அணி களமிறங்கியது.   பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக 6 ரன் வித்தியாசத்தில் மும்பை திரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் கடைசி ஓவரில் பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் பந்து வீச்சில் சர்ச்சைகள் உருவாகி உள்ளது.

கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மலிங்கா பந்துவீசினார். அவரது முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கப்பட்டது. இருந்தாலும், தொடர்ந்து ஆக்ரோஷமாக பந்து வீசிய மலிங்காவின் பந்தை அடிக்க முடியாமல் ஆர்சிபி வீரர்கள் தடுமாறினர்.  இந்த நிலையில், கடைசி ஒரு பந்தில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், பேட்டிங் செய்த ஆர்சிபி வீரர்  டி வில்லியர்ஸ் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். இதனால் மும்பை திரில் வெற்றி பெற்றது.

ஆனால், இதை டிவியில் பார்த்துக்கொண்டிருந்த கிரிக்கெட் ரசிகர்கள், மலிங்காவின் பந்து நோபால் என்று கூறினர்.  மலிங்கா பந்து வீசும்போது, அவரது கால் கிரிசை தாண்டியிருந்தது கண்கூடாக தெரிந்தது. ஆனால், அதை அம்பையர்கள் கவனிக்காததால், மும்பை அணி வெற்றி அறிவிக்கப்பட்டது.

அம்பையர்களின் அஜாக்கிரதையான செயலால் ஆர்சிபியின் வெற்றி பறிபோனதாக, பெங்களூரு ரசிகர்கள் கொந்தளிப்போய் உள்ளனர்.

நேற்றைய மலிங்கா பந்து வீச்சு, அம்பையர்களின் அஜாக்கிரதை போன்றவை  சமூக வலைதளங்களில்  கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.