சென்னை:

துப்பு நிலத்தில் ஆர்.டி.ஓ. அலுவலகம், இசை பல்கலைக் கழகம் கட்ட தமிழக அரசு பிறப்பித்த இரு அரசாணைகள் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இரு அரசாணைகளையும் சென்னை உயர் நீதி மன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. மேலும், சதுப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் அருகே பக்கிங்ஹாம் கால்வாயின் கரையோரப் பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களை போக்குவரத்துத் துறை மற்றும் சுற்றுலாத் துறைக்கு மாற்றம் செய்து கடந்த 20132014 ஆம் ஆண்டுகளில் வருவாய்த்துறை ஆணை பிறப்பித்திருந்தது. அதையடுத்து, அந்த இடத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு,  தமிழக வருவாய்த்துறை அரசாணை வெளியிட்டது.

இதை எதிர்த்து, பொதுநல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்ட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.வேணுகோபால் மற்றும் எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.

இதையடுத்து, வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பில்,   நீர்ப்பிடிப்புள்ள பகுதிகளை பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் பல வழக் களில் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காடிடிய நீதிபதிகள்,  நீர் ஆதார பகுதிகள் எப்போது வறட்சியாக இருக்கும் எனக் கூற முடியாது. இந்த பகுதிகளில் தான் மழைக்காலங்களில் நீர் தேங்கும். வனம் மற்றும் வன விலங்குகளின் பாதுகாப்பை இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 48ஏ தெளிவுபடுத்துகிறது.

இந்த நிலையில் மாநில அரசே இதுபோன்ற நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கட்டடம் கட்ட எப்படி முடிவெடுத்தது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுபோன்ற நீர்ப்பிடிப்பு பகுதிகளில் திடக்கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளைக் கொட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறிய அளவில் ஆரம்பமாகும் ஆக்கிரமிப்புகள் காலப்போக்கில் மிகப்பெரிய அளவில் விரிவாகி விடும்.  எனவே, சம்பந்தப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும். அந்தப் பகுதியில் கொட்டப்பட்டுள்ள கட்டடக் கழிவுகளை அகற்றி, அதை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்.

இந்த பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும். மேலும் மாநிலம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் ஈரப்பதமுள்ள நிலங்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வகையான நிலங்களுக்கான ஆணையத்தின் தலைவருடன் தலைமைச் செயலாளர் ஆலோசித்து இதுபோன்ற நிலங்களை கண்டறிய வேண்டும். ஒரு வேளை இதுபோன்ற நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால், கருணை காட்டாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இந்த ஆக்கிரமிப்புகளில் உள்ள கட்டடங்களுக்கு வழங்கப்படும் குடிநீர், மின் இணைப்பு உள்ளிட்டவைகளைத் துண்டிக்க வேண்டும்.

நீர் சேமிப்பு பகுதிகளை பாதுகாக்காவிட்டால் தண்ணீருக்கு பிற மாநிலங்களிடம் கையேந்த வேண்டிய நாள் தொலைவில் இல்லை என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த ஆக்கிரமிப்பாளர்கள் வழக்குத் தொடர்ந்தால் உரிமையியல் நீதிமன்றங்கள் எந்த தடை உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது. மேலும் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சதுப்பு நிலங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகள் தொடர்பான மாவட்ட அளவிலான புகார்களை பெறும் வகையில் உதவி தொலைபேசி எண்களை அமைக்க வேண்டும்.  அந்த அழைப்பில் வரும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

அதே நேரத்தில் சோழிங்கநல்லூர் பக்கிங்ஹாம் கால்வாயின் கரையோரப் பகுதியில் உள்ள சதுப்பு நிலங்களை வேறு துறைகளுக்கு மாற்றம் செய்து வருவாய்த்துறை பிறப்பித்துள்ள அரசாணைகள் ரத்து செய்யப்படுகின்றன

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.