சென்னை மெட்ரோரயில் 2வது திட்டம்: வழித்தடத்தை மாற்ற மா.கம்யூ எம்.பி. கோரிக்கை

டில்லி:

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் வழித்தடத்தை மாற்ற வேண்டும் என்றும் பாராளுமனற் மாநிலங்களவையில் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி எம்.பி.யான  டி.கே. ரங்கராஜன் வலியுறுத்தினார்.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நடைபெற்று வருகிறது.முதல் கட்ட திட்டத்தின்படி,  முதல் வழித்தடம், வண்ணாரப்பேட்டையிலிருந்து விமான நிலையம் வரை 23.1 கி.மீ. தூரம் அளவிலும்,  2வது வழித்தடம்படி  சென்னை சென்ட்ரலில் இருந்து புனித தோமையர் மலை வரை சுமார்  22 கி.மீ. தூரமும், மொத்தம் 45.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை நடைபெறும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 80 சதவிகித பணிகள் முடிவடைந்து, ரயில் போக்கு வரத்து நடைபெற்று வரும் நிலையில் மீதமுள்ள 20 சதவிகித பணிகளும் 2020ம் ஆண்டு  ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் குறித்து ஆய்வுகள் நடை பெற்று வருகின்றன.  மாதவரம் முதல் சிறுசேரி, சென்னை புறநகர் பேருந்து நிலையம் முதல் கலங்கரை விளக்கம் வரை ஒரு வழித்தடமும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை மற்றொரு வழித் தடத்தையும் இரண்டாவது கட்டமாகச் செயல்படுத்த கொள்கை அளவிலான ஒப்புதலை தமிழக அரசு வழங்கியுள்ளது.

இதில் சில வழித்தடங்களை மாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் மாநிலங்களவையில் வலியுறுத்தினார்.

மாநிலங்களவையில் நடைபெற்ற சிறப்பு கவன ஈர்ப்பு கோரிக்கையில் அவர்  பேசியதாவது,

தமிழ்நாடு அரசு ரூ.80 ஆயிரம் கோடியில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை இறுதி செய்துள்ளது. இத்திட்டத்திற்கு பொதுமக்கள் தரப்பில் பொதுவாக வரவேற்பு இருந்த போதிலும், திட்ட வழித்தடத்தில் சில குறைபாடுகள் உள்ளன.

அதாவது, மெட்ரோ ரயில் கொள்கை, 2017-இன் வழிகாட்டுதலின்படி இது அமையவில்லை. மேலும், தற்போது அமைக்கப்படவுள்ள திட்டத்தில் சென்னைக்கான 2-ஆவது மெட்ரோ ரயில் வழித்தடமானது, டிடிகே சாலை, லஸ் சர்ச் சாலை, கச்சேரி சாலை ஆகியவை வழியாகச் செல்கிறது.

இது வசதிபடைத்தவர்கள் வாழும் பகுதியாகும். இப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் சொந்த போக்குவரத்து வசதியைக் கொண்டுள்ளனர். மேலும், மூன்று கிலோ மீட்டர் வழித்தடத்தில் அரசு நிறுவனங்கள், மருத்துவமனைகள் அல்லது பள்ளி, கல்லூரிகள் ஏதும் இல்லை. இதனால், திட்டத்தின் நோக்கம் உரிய பயனை அளிக்காது.

இப்பகுதி சாலைகள் குறுகலானதாக இருப்பதால், இதர அரசு, தனியார் வாகனங்களின் போக்கு வரத்துக்கு மெட்ரோ ரயில் இடையூறை ஏற்படுத்தும். மேலும், மெட்ரோ ரயில் திட்டம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால் அதனைச் சார்ந்து மக்கள் அதிகம் பயன்படுத்தும் பேருந்து நிலையம், மின்சார ரயில் நிலையம் ஆகியவைகள் அருகமையில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது டி.டி.கே. சாலை வழியாக செல்லும் இந்த வழித்தடம் உயர் வசதிபடைத்தவர்கள் வசிக்கும் இடமாக இருப்பதாலும், மெட்ரோ ரயிலில் ஏறி, இறங்கி மாறி போவதற்கு மாற்று போக்குவரத்து வசதிகள் அருகில் இல்லாமல் இருப்பதாலும் இந்த வழித்தடம் பொதுமக்களுக்கு பயன்தாரது.

எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்ட அமைப்பின் வழித்தடத்தை டி.டி.கே. சாலைக்குப் பதிலாக மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

You may have missed