சென்னை:

தொழில்நுட்பக் கோளாறால் கணினி ஆசிரியர் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று டி.ஆர்.பி (ஆசிரியர் தேர்வு வாரியம்)  அறிவித்து உள்ளது.

மேலும்  தேர்வு நடைபெறும் நாள் மற்றும் மையங்கள் சார்ந்த விவரங்கள் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படும்  என்று தெரிவித்து உள்ளது.

தமிழக பள்ளிகளுக்கு தேவையான கணினி ஆசிரியர்களுக்கான ஆன்லைன் தேர்வு முதன்முறையாக  இன்று (23-06.2019) தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த நிலையில்,  திருச்செங்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள கேஎஸ்ஆர் கல்லூரியில்  தேர்வு நடைபெற இருந்தது. ஆனால், அங்குள்ள கம்ப்யூட்டர் சர்வர் பிரச்சினை காரணமாக தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறால் கணினி ஆசிரியர் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மற்றொரு நாளில் மறுதேர்வு நடத்தப்படும் என்றுஆசிரியர் தேர்வு வாரியம்  அறிவித்து உள்ளது.

இதுகுறித்து  ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதுகலை கணினி ஆசிரியர் நிலை -1க்கு, கணினி வழியில் 119 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக கணினி வழியில் நடத்தப்பட்ட இத்தேர்வு, பெரும் பாலான மையங்களில் எவ்வித இடர்பாடுமின்றி நடைபெற்றதாகவும் எனினும் ஒரு சில மையங்களில் ஓரிரு ஆய்வகங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணங்களால், சில தேர்வர்கள் தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தேர்வு மையத்துக்கு வருகை புரிந்து கணினி தொழில்நுட்பக் கோளாறால் தேர்வில் பங்கேற்காத வர்கள், தேர்வினை நிறைவு செய்யாதவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும். எனவே இத்தேர்வர்கள் எக்காரணத்தைக் கொண்டும் அச்சப்படத் தேவையில்லை, தேர்வு நடைபெறும் நாள், மையங்கள் சார்ந்த விவரங்கள் தேர்வர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

மேலும் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தேர்வு மைய விவரங்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலும் வெளியிடப்படும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.