டி.டி.வி.தினகரன் பண்ணை வீட்டில் மீண்டும் சோதனை!


புதுச்சேரி,

புதுச்சேரி அருகே உள்ள டிடிவி தினகரனின் பண்ணை வீட்டில் வருமான வரித்துறையினர் மீண்டும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா,  பெங்களூரு சிறையில் உள்ளார். அவருடைய உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்பட 200 இடங்களில் 1800 அதிகாரிகள் ஒரே நேரத்தில் கடந்த நவம்பர் மாதம்  சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை  கடந்த நவம்பர் 9ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற்றது.

சோதனையின் முடிவில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளி யானது. அப்போது சென்னை போயஸ் கார்டன் வீட்டில் உள்ள சில அறைகள், டிடிவி தினகரனின் புதுச்சேரி பண்ணைவீட்டில் உள்ள அறைகள் போன்றவை சீல் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

பின்னர் கடந்த டிசம்பரில் 14 இடடங்களில் மீண்டும் சோதனை நடைபெற்றது.

இந்நிலையில், புதுச்சேரி அருகே பொம்மையார்பாளையத்தில் உள்ள டி.டி.வி.தினகரன் பண்ணை வீட்டில் வருமானவரித்துறை மீண்டும் சோதனை  மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஆய்வின் போது சீல் வைத்து சென்ற அறையை திறந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டி.டி.வி.தினகரனுக்கு சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு உள்ளது.

புதுச்சேரியில் உள்ள இந்த பண்ணை வீட்டில்,  மாட்டுப்பண்ணை, விவசாய தோட்டங்கள் உள்பட  நவீன வசதிகளுடன் கூடிய பங்களாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.