“ரஜினி “காந்தி” சொன்னது தவறில்லை!” என்ற கட்டுரை நேற்று வெளியானது.

அதன் தொடுப்பு: https://patrikai.com/rajini-gandhi-said-was-not-wrong/

இக் கட்டுரைக்கு “இரும்புக் கரங்களுக்கு எதிராக எலும்புக் கரங்கள்”  என்றத தலைப்பில் எதிர்விணையாற்றியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் அ.குமரேசன்.

“ஒரு முரண்பாடான சூழலில் கோபப்படுகிறோம் என்றால் அந்த நொடியில் நாம் உண்மைக்காகப் பாடுபடுவதை ஏற்கெனவே நிறுத்திக்கொண்டுவிட்டோம், நமக்காகப் பாடுபடத் தொடங்கிவிட்டோம்.”

ஒரு திரைப்படத்தில் ரமணராக நடித்த ரஜினிகாந்த் வேறொரு படத்தில் புத்தராக நடித்திருந்திருப்பாரானால், புத்தர் சொன்ன இந்தக் கருத்து அவருக்கு ஒரு வசனமாக எழுதித் தரப்பட்டிருக்கக்கூடும். ஆயினும், தூத்துக்குடியில் தன்னை நோக்கி வீசப்பட்ட கேள்விகளால் கோபப்பட்டபோது இந்த மேற்கோள் நினைவுக்கு வந்திருக்குமா என்று சொல்வதற்கில்லை. ஏனென்றால் தூத்துக்குடியிலும் பின்னர் சென்னையிலும் செய்தியாளர்களிடம் அவர் பேசியவை வசனகர்த்தாக்களால் எழுதித்தரப்பட்டவை அல்ல, அவரது உள்ளத்திலிருந்து வந்த கருத்துகளே. அவருக்கு ஆலோசனை கூறக்கூடியவர்கள் என்று சிலர் இருக்கக்கூடும். ‘துக்ளக்’ குருமூர்த்தி, தமிழருவி மணியன் உள்ளிட்டோர் (சில எழுத்தாளர்கள் கூட) அவரது ஆலோசகர்  வட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இருந்தபோதிலும் அவர்களது ஆலோசனைகளை உள்வாங்கிக்கொண்டு, தனது சொந்தச் சிந்தனைகளாகவே வெளிப்படுத்துகிறார் என்றுதான் நான் கருதுகிறேன்.

எதற்கெடுத்தாலும் போராடினால் தமிழகம் சுடுகாடாகும் என்பது உள்பட அவர் கூறிய வாசகங்களை ஆதரித்தும் எதிர்த்தும் சுற்றிச் சுற்றி விவாதங்கள் நடைபெறுகின்றன. தனது தீவிர அரசியல் ஈடுபாட்டிற்கு இவ்வாறு தன்னைச் சுற்றியே விவாதிக்க வைப்பதை, அதற்காக சர்ச்சை கிளப்புவதை ஒரு முக்கிய கவன ஈர்ப்பு உத்தியாகக் கூட அவர் கருதக்கூடும். உணர்ச்சிப் பிழம்பாக இருக்கிற ஊருக்கு வந்து, துப்பாக்கித் தோட்டாக்களுக்கு பலியாகிவிடாமல் படுகாயங்களுடன் மருத்துவமனையில் இருப்பவர்களைப் பார்த்து ஆறுதல் கூறிவிட்டு, செய்தியாளர்களிடம் அவர் பகிர்ந்துகொண்ட சொற்கள் ஒரு திட்டத்தோடு இருந்தார் என்றே காட்டுகின்றன. எப்படியான கேள்விகள் வரும், அப்படி வந்தால் எப்படியான பதில்களைச் சொல்ல வேண்டும் என்று மனதளவில் அவர் ஒத்திகை பார்த்திருந்தார் என்றே காட்டுகின்றன. அதன்படி முன்தயாரிப்போடு பேசியிருந்தாலும் சரி, அல்லது அந்த இடத்தில், அந்தக் கணத்தில் தோன்றிய எண்ணங்களைப் பதிலாகச் சொல்லியிருந்தாலும் சரி, சுற்றி வளைக்காமல், மேற்பூச்சு இல்லாமல் அவர் அந்தச் சொற்களைக் கூறினார். அந்த வகையில் அது பாராட்டத்தக்கதுதான்.

ஆனால், அந்தச் சொற்களால் அவர் தெரிவித்திருக்கிற கண்ணோட்டங்கள் பாராட்டத்தக்கவை அல்ல. கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டியவையே. அந்தக் கண்ணோட்டங்களை நியாயப்படுத்துகிற வாதங்களும் விமர்சன மேடையில் வைக்கப்பட வேண்டியவையே. அவர் கோபப்பட்டது சரியா என்ற கேள்விக்கான பதிலாக, மருத்துவமனையிலிருந்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வந்தவரிடம் “நீங்கள் யார்” என்று அந்த இளைஞர் கேட்டது முறைதானா என்று எதிர்க்கேள்வி வைக்கப்படுகிறது. கண்ணீர் வந்துவிட்டதால் பேச முடியாதவராக வெளியே வந்தவரிடம் சந்தோஷ் ராஜ் என்ற இளைஞர், “நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? இவ்வளவு நாட்களாக ஏன் வரவில்லை,” என்று கேட்டதை “அது கோபத்தின் வெளிப்பாடு அல்ல, அருவருப்பின் உச்சம்” என்று வருணிக்கிறார் கட்டுரையாளர் இனியன் (பத்திரிகை.காம்). சமூக ஊடகங்களில் பலர் அந்த இளைஞரின் பின்னணி பற்றியெல்லாம் பதிவு செய்கிறார்கள். அந்த இளைஞர் தானாகக் கேட்டிருந்தாலும் சரி, ஒரு பின்னணியோடு கேட்டிருந்தாலும் சரி, அது தூத்துக்குடிக்கு ஏன் இத்தனை நாட்கள் வரவில்லை என்று மட்டும் கேட்கப்பட்டதல்ல, பொதுவாகவே இப்படிப்பட்ட பிரச்சனைகளின்போதெல்லாம் மக்களோடு வந்து நிற்கவில்லையே என்ற கோபத்திலிருந்தும் வந்த கேள்வி அது. காந்தியோடு ரஜினியை ஒப்பிடும் இனியன், இப்படியொரு கேள்வி காந்தியை நோக்கி வீசப்பட்டிருந்தால் அவர் எப்படி பதிலளித்திருப்பார் என்று யோசிக்கட்டும். தனது நிலைப்பாடுகளை விளக்குவதற்கான வாய்ப்பாக அதைப் பயன்படுத்தியிருப்பார் காந்தி.

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வந்தவரிடம் அப்படிக் கேட்டது அருவருப்பின் உச்சம் என்றால், பொது நோக்கத்திற்காகப் போராடத் திரண்டதற்காக சுட்டுக்கொல்லப்பட்டவர்களது குடும்பங்களில் துயரமும், காயம்பட்டோரின் வலியும், வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டிருப்போரின் கவலையும் இன்னமும் ஈரப்பிசுக்கு உலராத குருதி மண்ணாக இருக்கிற நிலையில், சமூகவிரோதிகள் ஊடுருவியதாகவும் காவல்துறையினர் தாக்கப்பட்டதாகவும் பேசியது எதன் உச்சம்? பிணக்கூராய்வுக்குப் பின் ஒப்படைக்கப்படும் சடலங்களைச்  சுடுகாட்டிற்கு எடுத்துப்போக வேண்டிய மன அழுத்தத்தோடு ஊர் மக்கள் இருக்கிறபோது, எதற்கெடுத்தாலும் போராடிக்கொண்டிருந்தால் தமிழகம் சுடுகாடாகும் என்று பேசுவது எதன் உச்சம்? பெரிய திரைப்பட நட்சத்திரம் என்பதால் (அவரே “நான் ஒரு நடிகனாகத்தான் தூத்துக்குடி செல்கிறேன்” என்று கூறியிருக்கிறார்) அவருடைய உணர்ச்சி நிலை மட்டும்தான் கருத்தில் கொள்ளப்பட வேண்டியதா? இடம் பொருள் ஏவல் என்பது அரசியலில் ஈடுபடப்போகிறவருக்கு இருந்தாக வேண்டிய பக்குவம் இல்லையா?

ரஜினிகாந்த் வரப்போவதை அறிந்து ஒரு எதிர்பார்ப்போடு இருந்தார்கள் தூத்துக்குடி மக்கள். தங்களுடைய போராட்டத்துக்கு ஒரு கூடுதல் வலிமை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அது. ஆனால், அவரது பேட்டிக்குப் பிறகு அந்த மக்கள் பெரும் ஏமாற்றத்தோடு இருக்கிறார்கள். ஒரு பக்கம் மக்கள் ஒரு புனிதமான நோக்கத்திற்காகப் போராடினார்கள் என்று சொல்கிறார். அப்புறம் இப்படியும் சொல்கிறார். தன்னலத்தோடு இல்லாமல், சக மனிதர்களின் நலனுக்காக நடக்கிற எந்தவொரு போராட்டமும் புனிதமானதுதான். அந்தப் போராட்டங்களை ஒடுக்க முயல்வதுதான் சுடுகாட்டுப் பாதை.

மேலும், மக்கள் எதற்கெடுத்தாலும் போராடுவதில்லை. சொல்லப்போனால் இதே போன்ற பல முக்கியப் பிரச்சனைகளில் பெரும்பகுதி மக்கள் ஒன்றுபட்டுப் போராட முன்வருவதில்லை  என்று விசனப்படுகிறவன் நான். மக்கள் அப்படிப் போராட முன்வந்துவிட்டால் தமிழகத்தின் புரட்சிகரமான முன்னேற்றங்கள் தடுக்க முடியாதவையாகிவிடும். ஜல்லிக்கட்டுப் போராட்டமும் கூடங்குளம் போராட்டமும் கதிராமங்கலம் போராட்டமும் நெடுவாசல் போராட்டமும் நியூட்ரினோ போராட்டமும் இப்போது தூத்துக்குடி போராட்டமும் இனிமேலாவது மக்களைப் பொதுப்பிரச்சனைக்காகப் போராடத் திரள்கிறவர்களாகப் பரிணமிக்கச் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான தொழில்கள், தொழிற்சாலைகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் மக்கள் எதிர்க்கிறார்களா? இயற்கையைக் கெடுத்து, சுற்றுச் சூழலை மாசுபடுத்தி, சுவாசக் காற்றை நச்சாக்கிய ஒரு ஆலை … அதன் பாதிப்புகளை நேரடியாக அனுபவிக்கிற மக்கள் அதை எதிர்க்கிறார்கள். இயற்கைச் சமநிலை, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு முன்னெப்போதையும் விட இப்போது பரவியிருக்கிறது, ஆகவே போராடுகிறார்கள். இயற்கையை மதிப்பவர் என்றால் இப்படிப்பட்ட போராட்டங்களுக்கு தனது ஆதரவு என்றும் உண்டு என்று ரஜினி அறிவிக்க வேண்டுமேயன்றி, தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்று சபிக்கக்கூடாது.

ஆனால், இனியன் போன்றோர் கிழித்துப்போட்ட பழைய காலண்டர் தாள்களைக் கடந்து வர மனமின்றி இருக்கிறார்கள் போலும். அதன் அடையாளமாகத்தான், ஸ்டெர்லைட் ஆலையை எதிர்க்கிற அரசியல் கட்சிகள் முன்பு ஆதரித்தது ஏன் என்று அவர்களைப் பார்த்து சந்தோஷ் கேள்வி கேட்கட்டுமே என்று கூறுகிறார்.

இவர் மேற்கோள் காட்டுகிற காந்தி, தனது நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்வது பற்றிக் கூறியது இங்கே நினைவுகூரத்தக்கது. “எனது கருத்துகளை மாற்றிக்கொள்கிறேன் என்று விமர்சிக்கிறார்கள். இரண்டாவதாக என்ன கருத்துக் கூறுகிறேனோ அதுவே எனது இன்றைய நிலைப்பாடாக எடுத்துக்கொள்க,” என்றார் காந்தி. இது இன்றைய அரசியல் கட்சிகளுக்குப் பொருந்தாதா? அப்படியே முன்பு ஆதரித்த சில கட்சிகள் இப்போது எதிர்க்கின்றன என்று ஒரு வாதத்திற்காக எடுத்துக்கொள்வது என்றால், முன்பு அக்கட்சிகள் ஸ்டெர்லைட் ஆலையை ஆதரித்தது சரியா இப்போது மக்களோடு சேர்ந்து எதிர்ப்பது சரியா என்றுதான் விவாதிக்க வேண்டும். அதை விடுத்து, அந்தக் கட்சிகளைப் பார்த்துக் கேள்வி கேட்கச் சொல்வது, ஆலை இயங்க வேண்டுமா கூடாதா என்பதில் தனது நிலைப்பாடு என்ன என்பதை நேரடியாகச் சொல்லாமல் நழுவுகிற உத்தி.

“தூத்துக்குடிக்குச் செல்லாவிட்டாம்ல ஏன் செல்லவில்லை என்று கேள்வி. சென்றால் ஏன் இப்போது மட்டும் வந்தீர்கள்  என்று ஆள்வைத்துக் கேட்க வேண்டியது” என்று தாக்குகிறார் இனியன். ஆதங்கத்தை நேரடியாகக் கேட்டால் என்ன, ஆள் வைத்துக் கேட்டால் என்ன? போராட்டம் நடந்த 100 நாட்களிலும், அந்தப் புனிதப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவான வெளிப்பாடு எதுவும் ரஜினியிடமிருந்து வந்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை, போராட்டங்களால் வளர்ச்சி தடைப்படும் என்ற எண்ணத்தின் காரணமாக அந்த வெளிப்பாடு வரவில்லையா? தன்னை நெருங்க முடிந்த ஒரு இளைஞர் இப்படிக் கேட்பதை “ஆள்வைத்துக் கேட்க வேண்டியது” என்று சாயம்பூசுவதானால், ரஜினியின் பேச்சில் பிரதமரின் குரலும் முதலமைச்சரின் குரலும் எதிரொலிப்பதால் அவர்கள் வைத்த ஆள்தான் ரஜினியா என்று விமர்சகர்கள் கேட்பார்களே?

மேலும், “தூத்துக்குடிக்குச் செல்லாவிட்டாம்ல ஏன் செல்லவில்லை என்று கேள்வி. சென்றால் ஏன் இப்போது மட்டும் வந்தீர்கள்  என்று கேட்க வேண்டியது” என்று கேள்வியில் உள்ள நியாயத்தை, அரசியல் கட்சிகள் பற்றிய இனியனின் விமர்சனம் தொடர்பாக இப்படியொரு கேள்விக்கும் பொருத்தலாம்: “ஸ்டெர்லைட் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்றால் ஏன் ஆதரிக்கவில்லை என்ற கேள்வி. ஆதரித்தால் ஏன் இப்போது மட்டும் ஆதரிக்கிறீர்கள் என்று கேட்க வேண்டியது?”

‘காலா’ படத்தை புரமோட் செய்வதற்காக ரஜினி தூத்துக்குடி சென்றார் என்று சிலர் விமர்சித்ததற்கெல்லாம் மெனக்கிட்டு விளக்கமளித்திருக்கிறார் இனியன். பல்வேறு கோணங்களில் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். என்னைப் பொறுத்தவரையில், ரஜினி நடித்த ரஞ்ஜித் படம் ‘காலா’. ரஞ்ஜித்தின் முந்தைய படங்களில் இருந்தது போன்ற சமூகச் சிந்தனைகள் இந்தப் படத்திலும் இருக்கும், அவை சேதாரமின்றி மக்களிடம் போய்ச்சேர வேண்டும் என்ற அக்கறை எனக்கு உண்டு. ரஜினியின் தூத்துக்குடி பேச்சில் வெளிப்பட்ட போராட்ட எதிர்ப்புக் கருத்துகளாலும், சமூக விரோதிகள் என்று பேட்ஜ் குத்துகிற வேலையாலும் படத்தின் வணிகம் பாதிக்கப்படுமோ என்ற கவலை தயாரிப்பாளருக்கு ஏற்பட்டிருக்கிறதோ என்னவோ, படத்தில் இருக்கக்கூடிய சமூகச் செய்தி பரவுவது பாதிக்கப்படுமோ என்ற கவலை எனக்கு இருக்கிறது.

பொதுவாழ்க்கை என்று களமிறங்கிய பிறகு, திரைப்படத்துறையில் பன்மடங்கு சாதித்தவர், வயதில் மூத்தவர், பெரும் தலைவர்களுடன் பழகியவர் என்பதற்காகவெல்லாம் கேள்விகளைத் தவிர்க்க முடியாது. மக்களின் உணர்வை வெளிப்படுத்தினார் என்பதால்தான் சந்தோஷ் அப்படிக் கேட்டதை யாரும் கண்டிக்கவில்லை. தமிழர் பண்பாடு பற்றி முழங்குகிறவர்கள் தங்களுக்குக் கிடைக்காத வரவேற்பு ரஜினிக்குக் கிடைத்துவிட்டதால்தான் சந்தோஷ் செயலைக் கண்டிக்கவில்லை என்று சிறுமைப்படுத்துவது என்ன பண்பாடோ? ரௌத்திரம் பழகுவதும் தமிழர் பண்பாடுதான் இனியன் அவர்களே.

திரைப்படத்துறை போராட்டங்களில் ரஜினி தொழிலாளர் பக்கம்தான் நின்றார் என்ற தகவல் மகிழ்ச்சிக்குரியதுதான். அந்தப் போராட்டத்தில் தொழிலாளர் பக்கம் நின்றவர், நியாயத்திற்கும் நீதிக்குமான எல்லாப் போராட்டங்களிலும் பொதுமக்களாகிய சமுதாயத்தின் இதர பிரிவு தொழிலாளர்களோடு நிற்கட்டும். அப்படி நின்றால் மனமுவந்து வரவேற்போம்.

ஆனால், போராட்டங்களுக்கு எதிரான மனநிலையைத்தான் இதுவரையில் அவர் வெளிப்படுத்தி வந்திருக்கிறார். கட்சி ஆரம்பிக்கப்போவது பற்றி அறிவித்தபோது, பிரச்சனைகளில் தலையிடுவது பற்றிக் குறிப்பிட்ட அவர், “அறிக்கை விடுவதற்கும் போராட்டம் நடத்துவதற்கும் மற்ற கட்சிகள் இருக்கின்றன, நீங்கள் உங்கள் வேலைகளில் கவனம் செலுத்துங்கள்” என்று தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறியதை மறந்துவிடுவதற்கில்லை. அதே மனநிலையைத்தான் இப்போதும் வெளிப்படுத்துகிறார் என்றால், அவர் ஆரம்பிக்கப்போகிற கட்சி தப்பித்தவறி வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்துவிட்டால், முதல்வர் நாற்காலியில் தான் அமர வேண்டியிருக்கும், அப்போது இதே போன்ற போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று கனவச்சம் கொள்கிறாரா? அதற்காகத்தான் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று அட்வான்ஸாகச் சொல்லி வைக்கிறாரா?

இவரது திரைப்படங்களில் கூட, இவர் தனியொரு ஆளாகப் போராடித்தான் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பாரேயல்லாமல், மக்களைத் திரட்டிப் போராடியதாகக் காட்சிகளை அமைத்திருக்க மாட்டார். இவரைப் பொறுத்தவரையில் சிங்கிளாக வந்தால்தான் சிங்கம். கூட்டமாக வந்தால்…

ஆனால் மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரள வேண்டும், அலையலையாகப் போராட்டங்களில் பங்கேற்க வேண்டும், அதுதான் பிரச்சனைகளுக்கு நம்பகமான, நிரந்தரமான, உறுதியான தீர்வுகளுக்கு இட்டுச் செல்லும். வரலாறு அதைத்தான் கற்பிக்கிறது. இது சூப்பர் ஸ்டார்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ, இனியன் போன்றோருக்கு நன்றாகவே தெரிந்திருக்க வேண்டும். அதை அவருக்கு இவர்கள் எடுத்துச் சொல்லட்டும். சீருடைப் பணியாளர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக வெளிப்படுத்தும் ஆவேசத்தை விடப் பல மடங்கு சினத்தை, அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது தொடர்பாகவும் நூற்றுக்கணக்கானோர் கைகால் உடைக்கப்பட்டது தொடர்பாகவும் வெளிப்படுத்துமாறு அவருக்கு ஆலோசனை கூறட்டும். அரசு நடத்திய இந்த வன்முறையின் நோக்கம் ஸ்டெர்லைட் எதிர்ப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பது மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இப்படிப்பட்ட இயற்கைவிரோதத் திட்டங்களுக்கு எதிராகக் கொந்தளித்துக்கொண்டிருக்கிற மக்களை அச்சுறுத்தி அடக்கிவைப்பதுதான் என்ற அரசியலையும் அவருக்குப் புரியவைக்கட்டும். இரும்புக்கரம் பற்றிப் பேசுகிற அவருக்கு இது ஏற்கெனவே தெரிந்திருக்கவும் கூடும்.

மனிதர்களுக்கு இருப்பது சாதாரண எலும்புக்கரம்தான். சுடப்பட்டால் துவளக்கூடியதுதான். தடியடிகளில் நொறுங்கக்கூடியதுதான். ஆனால், தன்னலமின்றிப் பொது அக்கறையோடு அந்தத் தனிமனிதக் கரங்கள் ஒன்றுபட்டு சமூக மக்களின் கரங்களாக இணைந்துவிட்டால், ஆட்சியில் இருப்போர் உயர்த்துகிற இரும்புக்கரம், ஆட்சிக் கனவுடன் வருபவர் காட்டுகிற இரும்புக்கரம் எல்லாவற்றையும் துருப்பிடிக்க வைத்துவிடும்.