போருக்கு தயாராக இருக்கிறோம்….பாகிஸ்தான் ராணுவம்

--

இஸ்லாமாபாத் :

காஷ்மீரில் 3 போலீசார் கொல்லப்பட்டது, ராணுவ வீரர் கொடூர கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அமெரிக்காவில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் நடக்க இருந்த பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது. ‘‘பயங்கரவாதத்தை பாகிஸ்தான் அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

இந்திய வீரர்கள் மீதான பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு பதிலடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்’’ என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் ஆசிப் கபூர் கூறுகையில், ‘‘உயிரிழந்த வீரரின் உடலை சிதைத்த இந்திய ராணுவம் எங்கள் மீது குற்றம் சுமத்துகிறது. அவர்கள், கடந்த காலங்களில் இதை போன்று பலமுறை செய்துள்ளனர். ஆனால், பாகிஸ்தான் ராணுவம் கட்டுக்கோப்பானது, இது போன்ற காட்டுமிராண்டித்தன செயல்களில் எவ்விதத்திலும் எங்கள் ராணுவம் ஈடுபடாது.

போருக்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். எனினும், பாகிஸ்தான் மக்களின் நலன், அண்டை நாடுகள் மற்றும் பிராந்திய நலன் கருதி அமைதி வழியில் செல்லவே விரும்புகிறோம். எல்லையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று கடந்த மே மாதம் இந்திய ராணுவம் கோரிக்கை வைத்தது. அதை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். ஆனால், இவ்வாறான செயல்களில் இந்திய ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டால் நாங்கள் வேறு விதமான நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் வரும்’’ என்றார்.

You may have missed