டில்லியில் ஆம்ஆத்மியுடன் கூட்டணி வைக்க தயார்: ஷீலா தீட்சித்

டில்லி:

காங்கிரஸ் மேலிடம் அனுமதித்தால் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி யுடன் டில்லியில் கூட்டணி வைக்க தயார் என்று டில்லி மாநில முன்னாள் முதல்வரும்,  காங்கிரஸ் தலைவருமான ஷீலா தீட்சித் கூறி உள்ளார்.

சமீப காலமாக மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக இணைந்து வரும் எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற தேர்தலிலும் ஒரே அணியாக செயல்பட்டு பாஜகவை வீழ்த்த வியூகங்கள் வகுத்து வருகின்றன.

தற்போது நடைபெற்ற முடிந்த மாநில சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், டில்லியில் ஆம்ஆத்மியுடன் தேர்தல் கூட்டணி வைக்கலாம் என்று முன்னாள் டில்லி முதல்வரான ஷீலா தீட்சித் கருத்து தெரிவித்து உள்ளார்.

சமீப காலமாக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆம்ஆத்மி கட்சி தலைவர்களும் கலந்துகொண்டு வரும் நிலையில்,  பாஜக.வுக்கு எதிரான கூட்டணியில் ஆம் ஆத்மி பங்கேற்கும என்று டில்லி சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் மேலிடம் அனுமதித்தால் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கூட்டணி வைக்கலாம் என்றும் ஷீலா தீட்சித் கூறி உள்ளார்.

ஆனால், ஏற்கனவே  டில்லி சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் கருத்துக்கு பதில் அளித்திருந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சரஸ்மித்த முகர்ஜி, மூத்த தலைவர் சட்டர்சிங் ஆகியோர்,”காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதுபோல  காங்கிரஸ் தலைவர் அஜய் மேகனும் ஆம்ஆத்மி யுடன் கூட்டணி கிடையாது என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் முன்னாள் காங்கிரஸ் டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.