சென்னை: புதுச்சேரி மாநிலத்தில், காங்கிரஸ் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் தனித்து நிற்க தயார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்  கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

ராகுல்காந்தியின் தேர்தல் பிரசாரம் குறித்து, தமிழ்நாடு  காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கொங்குமண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,  ‘கொங்கு மண்டலத்தில் ராகுல் காந்தியின் வருகை எழுச்சிகரமானதாக இருக்கும் என்று கூறியவர்,  நாடாளுமன்ற தேர்தலின் போது ராகுல் காந்தி அவர்கள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரப்புரையை விட 5 மடங்கு அதிக பிரச்சாரம் மேற்கொள்வார் என்றார்.

மேலும, கோவையில் தொழிலதிபர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.  அவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை கேட்றிவார்.

அதுபோல, திருப்பூரில் தொழிலாளர்களோடு கலந்துரையாடி புதிய தொழிற்கொள்கையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கேட்டறிய இருக்கிறார் என்றார்.

பின்னர் செய்தியாளர்கள், திமுக காங்கிரஸ் கூட்டணி, புதுச்சேரியில் எழுந்துள்ள சலசலப்பு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கே.எஸ்.அழகிரி,   ‘கூட்டணிக்குள் எது நடந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். ஆனால் நண்பர்களோடு இணக்கமான சூழ்நிலையை விரும்புகிறோம். அதேவேளையில் தனியாக நிற்கவும் தயாராக இருக்கிறோம்.
தமிழகத்தில்  திமுக, காங்கிரஸ் கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை என்றவர்,  மதசார்பின்மையில் நம்பிக்கை உள்ள மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் எங்களோடு கூட்டணிக்கு வந்தால் வரவேற்கிறோம். தனித்து நின்று வாக்குகளை பிரிப்பதற்கு பதில் வலுவான எங்கள் கூட்டணியோடு நின்று தேர்தலை எதிர்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.