சென்னை,

ரசியல் சாசனம் சட்டத்தின்படி ஆய்வு நடத்துவதாக கூறும் ஆளுநர் பன்வாரிலால், சட்டப்படி தமிழக சட்டமன்றத்தை கூட்டடி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட தயாரா என எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் தன்னிச்சையாக ஆலோசனை நடத்தினார். மேலும் பல பகுதிகளுக்கு சென்றும் ஆய்வு மேற்கொண்டார்.

இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆளுநரின் ஆய்வுக்கு தமிழக அமைச்சர்கள் வரவேற்பு தெரிவித்தனர். ஆனால், மற்ற கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாநில உரிமையை பறிக்கும் மத்திய அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கையே ஆளுநரின் ஆய்வு என்றும்,இது அரசின் சீரான நிர்வாகத்துக்கு துளியும் உதவாது என்றும்,. பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடாமல் ஆளுநர் ஆய்வு நடத்துவதால் எவ்வித பயனும் இல்லை என மு.க.ஸ்டாலின் ஏற்கனவே  குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து ஆளுநர் தரப்பில் விளக்கம் வெளியிடப்பட்டது. அதில்,  அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டுதான் கோவையில்  ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆளுநரின் விளக்கம் குறித்து  திமுக செயல்தலைவர் ஸ்டாலினிடம்  செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஸ்டாலின், “அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படையில், இது சட்டத்தையே மதிக்காத ஒரு சூழ்நிலை என்பதுதான் என்னுடைய கருத்து.

ஆனால், அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படையில் தான் பார்த்தேன் என்று அவர் சொல்கிறார்.

அப்படியெனில் நான் கேட்க விரும்புவது , இன்றைக்கு மெஜாரிட்டி இல்லாத நிலையில், ஒரு மைனாரிட்டி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

எனவே, அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படையில், உடனடியாக அவர் சட்டமன்றத்தைக் கூட்ட உத்திரவிட வேண்டும், அதற்கு அவர் தயாராக இருக்கிறாரா?”

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.