பருவமழையை எதிர்கொள்ள தயார்! அமைச்சர் வேலுமணி

சென்னை,

மிழக்ததில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், அதை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு இருப்பதாக தமிழக உள்ளாட்சித்துறை  அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில்  ஆய்வுகூட்டம் நடைபெற்றது.

ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சியில் 26-10-17 (இன்று) முதல் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து (குறைந்தபட்சம் 75 பணியாளர்கள்) பணியாற்றும் வகையில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடர்பான புகார்களை பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1913 மூலமும், கட்டுப்பாட்டு அறையில் உள்ள 044-25367823, 25384965, 25383694 25619206 மூலமும் வாட்ஸ்-அப் எண்கள் 9445477662 மற்றும் 9445477205 மூலமும் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

இக்கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் தகவல்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவித்து உடனுக்குடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், மாநகராட்சியின் வசமுள்ள 1,096 வாக்கி-டாக்கிகள் மூலம் தகவல் தொடர்பினை பரிமாறிக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநகராட்சி வசமுள்ள 16 சுரங்கப்பாதைகள், நெடுஞ்சாலைத்துறை வசமுள்ள 6 சுரங்கப்பாதைகள் என மொத்தம் 22 சுரங்கப்பாதைகள் மற்றும் தண்ணீர் தேங்கும் இடங்களாக கண்டறியப்பட்ட இடங்களில் 60 உயர் அழுத்த டீசல் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பருவ மழையின்போது தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 15 மண்டலங்களிலும் மொத்தம் 458 எண்ணிக்கையில் 5 அல்லது 7.5 குதிரைத்திறன் கொண்ட மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, தடையில்லா போக்குவரத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மழைநீர் பெருகும் தாழ்வான பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க 109 மீட்பு படகுகளும், மீட்கப்பட்ட பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்திட 176 நிவாரண முகாம்களும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு ஒரே நேரத்தில் 1,500 நபர்களுக்கு உணவு தயாரித்திட 4 பொது சமையல் கூடங்களும், பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்திட 44 நிலையான மற்றும் நடமாடும் மருத்துவ குழுக்களும், 50 அம்மா குடிநீர் மையங்கள் மூலம் மழைக்காலங்களில் பாதுகாப்பான தரமான குடிநீரை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.