சென்னை:

நான் அரசியலில் இருப்பது பாமக நிறுவனர் ராமதாசுக்கும் , அன்புமணிக்கும் பிடிக்கவில்லை என்றால் நான் அரசியலை விட்டு விலக தயாராக இருக்கிறேன் என்று விடுதலைசிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பொன்னமராவதியில் நடைபெற்ற இரு சமுகத்தினருக்கு இடையேயான கலவரத்தில் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  பாமக வழக்கறிஞர் பாலு, சிதம்பரம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு   வெற்றி வாய்ப்பு இருந்தும் மோதல் ஏற்படக் கூடாது என்ற காரணத்திற்காக மட்டுமே போட்டியிடவில்லை என்றவர்,  பொன்பரப்பி சம்வம் தொடர்பாக திருமாவளவன் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகே  போராட்டம் என்று அறிவித்து உள்ளதாகவும், இதற்கு பின்னணியில் ஸ்டாலின் இருப்பது தெரிய வருவதாகவும் குற்றம் சுமத்தி இருந்தார்.

இந்த நிலையில் பொன்பரப்பி சம்பவத்தைக் கண்டித்து, சென்னை வள்ளுவர்கோட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிகவின் கூட்டணி கட்சிகளான  திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், திராவிடர் கழகம் உள்பட பல  தோழமை கட்சிகள் பங்கேற்றன.

ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாமகவிடம் இருந்து அப்பாவி வன்னிய மக்களை காப்பாற்ற வேண்டும் என்றும், வன்னிய மக்களை அரசியல்ஆதாயத்திற்காக பாமக பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும், ன்னிய இன மக்களுக்கு முதல் எதிரியே பாமக கட்சி தான் என்று கூறியவர்,  நான் அரசியலில் இருப்பது பாமக நிறுவனர் ராமதாசுக்கும் , அன்புமணிக்கும் பிடிக்கவில்லை என்றால் நான் அரசியலை விட்டு விலக தயாராக இருக்கிறேன் என்றவர், உழைக்கும் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் அது தான் எனக்கு தேவை , அந்த உழைக்கும் மக்கள் நிம்மதியாக இருக்க என்னோட அரசியல் வாழ்க்கையை விட தயார் என்றும் அதிரடியாக கூறினார்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், அரசியல் ஆதாயத்திற்காக திட்டமிட்டு பாமக இந்த வன்முறை வெறி யாட்டத்தை நடத்தி உள்ளதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பொன்பரப்பி சம்பவத்தில் வன்முறையாளர்களுக்கு காவல்துறை துணைபோனதாக குற்றம்சாட்டினார்.