கொரோனா பாதுகாப்பு கவச ஆடைகள் தயாரிக்க தயாராகும் கோவை…

டெல்லி:

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து, காத்துக்கொள்ளும் வகையில், கொரோனா பாதுகாப்பு கவச ஆடைகள் தயாரியுங்கள்  என்று இந்திய ஜவுளி நிறுவனங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த கோரிக்கையை கோவையில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கம் ஏற்று, அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டவர் களுக்கும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பவர்களும் பாதுகாப்பு உடைகள் தேவைப்படுகிறது. இவைகள் போதிய அளவு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே முகக்கவசம் மற்றும் சானிடைசர்கள் தேவையான அளவு கிடைக்காத நிலையில், தற்போது பாதுகாப்பு ஆடைகளும் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா பாதுகாப்பு கவச ஆடைகளுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அதன் ஏற்றுமதியை தொடர இயலாது பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் கைவிரித்து விட்டது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பில் ஈடுபடும் மருத்துவப் பணியாளர்களுக்கான தோவையான  பாதுகாப்பு கவச ஆடைகளை போதிய அளவில் தயாரித்து தருமாறு  அது தொடர்பான இந்திய  ஜவுளி நிறுவனங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதன்படி, உலக சுகாதார நிறுவன அளவுகோல் மற்றும் ISO தரத்துடன் கூடிய பாதுகாப்பு கவச ஆடைகளை தயாரிக்க உள்நாட்டு நிறுவனங்களுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று  5 நிறுவனங்கள், அதற்கான ஆடைகளை தயாரிக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.  அதற்கான மாதிரிகள் பெறப்பட்டு, கோவையில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்க ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

விரைவில் ஆடை தயாரிக்கும் பணி தொடங்கும் என தெரிகிறது.