சென்னை: ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியதில்லை; தமிழக அரசு குழு அமைத்தது அதிர்ச்சி அளிக்கிறது, இருந்தாலும் எதையும் சந்திக்க தயாராக இருப்பதாக தமிழகஅரசுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதில் கூறியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து, அரியர் மாணவர்கள் தேர்வு அறிவிப்பு போன்ற விவகாரங்களில், தமிழகஅரசின் முடிவுக்கு எதிராக சூரப்பா செயல்பட்டு வருகிறார். இது தொடர்பாக தமிழகஅரசு அவருக்கு பலமுறை அறிவுறுத்திய நிலையில், அவர் தொடர்ந்து அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார்.

இந்த நிலையில்,  அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பாக, துணை வேந்தர் சூரப்பா மீதான புகார்கள் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குழு  மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்கவும்  அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த துணைவேந்தர் சூரப்பா, எனக்கு எதிராக தமிழக அரசு விசாரணை குழு அமைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.

மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு பைசா கூட நான் லஞ்சமாக வாங்கவில்லை. எனது அதிகாரத்தை பயன்படுத்தி மகளுக்கு பணி நியமனம் அளிக்கவில்லை.  எனது மகளுக்கு நான் பரிந்துரை செய்ய வேண்டியதில்லை; அவருக்கு அனைத்து தகுதியும் உள்ளது.பெயர் குறிப்படாமல் எனக்கு சில மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. மிரட்டல்களுக்கு அடிபணியாததால் எனக்கு எதிராக அவதூறு புகார்களை கூறுகின்றனர்.

நான் எந்த தவறும் செய்யவில்லை; நான் நேர்மையானவன். எனது வங்கி கணக்கு விவரங்களை யார் வேண்டுமானாலும் சரிபார்த்து கொள்ளலாம்.   என் மீது பழிவாங்கும் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கிறதா? என்பதை கல்வியாளர்கள் தான் சொல்ல வேண்டும். விசாரணை குறித்து கவலை இல்லை. எதையும் சந்திக்க தயார்”. இதுதொடர்பாக ஆளுநர் உள்பட யாரையும் தான் சந்திக்க போவதில்லை என்று கூறினார்.