இடைத்தேர்தலை சந்திக்க தயார்: முதல்வர் பழனிச்சாமி

சென்னை:

டிடிவி ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதி மன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு அதிமுகவினரிடையே மிகுந்த  உற்சாகத்தை கொடுத்துள்ளது.

தீர்ப்பை வரவேற்று அதிமுக தலைமைஅலுவலகம் உள்பட தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில்,அதிமுக தலைமை அலுவலகம் வந்த முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். அவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர். அவர்களுக்கு அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணைமுதல்வர் ஓபிஎஸ் உடன் செய்தியாளர் களை சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்களை தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பினர்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் சிறந்த தீர்ப்பு வெளியாகி உள்ளது மகிழ்ச்சியை தருகிறது என்று கூறினார்.

செய்தியாளர்கள் இடைத்தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த முதல்வர், தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என நீதி மன்றம் கூறியிருப்பதால் இடைத்தேர்தல் நடத்துவது பற்றி தேர்தல் ஆணையம் தான் அறிவிக்க வேண்டும் என்றார்.

இந்த தொகுதிகளில் எப்போது இடைத்தேர்தல் வந்தாலும், அதனை சந்திக்க தயாராக உள்ளோம். அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்றும் கூறினார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கடந்த பாராளுமன்றத் தேர்தலில், தமிழகம் மற்றும் புதுவையில் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. அதே நிலை பாராளுமன்றத்தில் தொடரும். வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியுடன் அதிமுக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.