டில்லி,

டில்லி சென்றுள்ள தமிழக அமைச்சர் ஜெயக்குமார், தேர்தலை கண்டு அதிமுக அஞ்சாது, தமிழகத்தில் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக இருப்பதாக கூறினார்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து டில்லி சென்றுள்ள  அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் முடிவு குறித்து கருத்து தெரிவிக்க இயலாது. ஜனநாயக முறைப்படி சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளதால், அதில் யாரும் தலையிட முடியாது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க மு.க. ஸ்டாலினும், தினகரனும் கூட்டு சேர்ந்து சதி செய்து வருகின்றனர். அவர்களின் கனவு நிறைவேறாது.

அதிமுக தேர்தலை கண்டு ஒருபோதும் அஞ்சாது. தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக இருக்கிறது என்றார்.

டில்லி வந்தது ஏன் என்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,  தமிழக வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் பேச தில்லிக்கு வந்துள்ளோம் என்றும், இரட்டை இலை சம்பந்தமாக தேர்தல் ஆணையர்களை சந்திக்கும் திட்டம் ஏதும் தற்போது இல்லை என்றும், அதிமுக கட்சியில் எந்தவித குழப்பமும் இல்லை, ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.