பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றத் தயார்! அமைச்சர் ராஜ்நாத் சிங்

டெல்லி:

பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்புணர்வு போன்ற குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்களை இயற்ற தயாராக இருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மக்களவையில் கூறினார்.

தெலுங்கானா மாநிலத்தில் கால்நடை மருத்துவரான இளம்பெண் பிரியங்கா ரெட்டி, பாலியல்வன்புணர்வு செய்யப்பட்ட எரித்துக்கொள்ளப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணமானவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. பெண் மருத்துவர் தொடர்ந்து அந்த வழியாக வருவதை கவனித்து வந்த சமூக விரோதிகள், அவர் ஓட்டிவந்த ஸ்கூட்டியின் பின்புற டயரைப் பழுதாக்கி, பாதிக்கப்பட்டவரை தங்கள் சதிவலைக்குள் நயவஞ்சகமாக சிக்க வைத்து, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டது தெரிய வந்தது.

இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. பெண் உறுப்பினர்கள், இந்த வன்கொடுமைக்கு எதிராக பொங்கி எழுந்தனர். சமாஜ்வாதி  பெண் எம்.பி. ஜெயா பச்சன், அதிமுக எம்.பி. விஜிலா சத்தியானந்த் உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்.பி.க்களும் இந்தப் பிரச்சினையை எழுப்பி கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர்.

இதையடுத்து, பதில் அளித்து பேசிய மத்திய  பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிஙங், ”ஐதராபாத்தில் கால்நடை மருத்துவரைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது நமது நாட்டுக்கு  அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அனைவரையும் காயப்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அவர்கள் செய்த குற்றத்திற்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் அகற்றவும், முழு சபையும் ஒப்புக் கொள்ளும் மாதிரியான சட்டத்தை உருவாக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்” என்றார். பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு போன்ற கொடூரமான குற்றங்களை ஆராய்ந்து, சட்டத்தில் வலுவான விதிமுறைகளைச் செயல்படுத்த அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.

கார்ட்டூன் கேலரி