பெங்களூரு:

ர்நாடக மாநிலத்தில் வரும் 5ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும், குமாரசாமியுடன் இணைந்து மீண்டும் ஆட்சி அமைக்க தயார் என கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அறிவித்து உள்ளார்.

கடந்த ஆண்டு (2018) நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில், எந்தவொரு கட்சியும் வெற்றிபெறாத நிலையில், குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. மாநில முதல்வராக குமாரசாமி பதவி ஏற்றார், துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் பதவி வகித்தார். இரு கட்சிகளும் சேர்ந்து  119 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி  நடைபெற்று வந்தது,.

இடையிடையே சில எம்எல்ஏக்கள், மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள், அதிகார ஆசையில், பாஜகவுக்கு ஆதரவாக, தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்களும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் பதவியை ராஜினாமா செய்தனர். அத்துடன்  2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் ஆதரவை விலக்கிக் கொண்டு பாரதிய ஜனதா ஆதரவாளர்களாக மாறினர்.

இதனால் குமாரசாமி தலைமையிலான ஆட்சி, கடந்த ஜூலை மாதம் 23ந்தேதி கவிழ்ந்தது.இதையடுத்து, பதவிகளை ராஜினாமா செய்த எம்எல்ஏக்களின் தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டு, டிசம்பர் 5ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, வரும் 5ந்தேதி 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், பாஜகவுக்கு ஆதரவு அளித்த எம்எம்எல்ஏக்களில் 13 பேர் பாஜக சார்பில் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சியின் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என்று முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இதனால், மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயற்சி செய்யும், ஆட்சி அமைக்க குமாரசாமியிடம் ஆதரவு கோரப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா,  கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் 15 தொகுதிகளிலும் பா.ஜனதா வேட்பளார்கள் 100 சதவீதம் வெற்றி பெறுவது உறுதி. இடைத்தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் மீண்டும் கூட்டணி குறித்து பேசுவதாக சொல்கிறார்கள். இந்த கூட்டணி பேச்சுக்கு எந்த மதிப்பும் கிடையாது. . மீண்டும் முதல்-மந்திரியாக சித்தராமையா பகல் கனவு காண்கிறார். இடைத்தேர்தலில் காங்கிரஸ் மண்ணை கவ்வும். எனது ஆட்சியின் பதவி காலம் நிறைவடையும் வரை காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருக்கும் என்று விமர்சித்துள்ளார்.

வரும் 5ந்தேதி கர்நாடக மாநிலத்தில் 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை 9ந்தேதி வெளியாக உள்ளது. இந்த தேர்தல் முடிவுக்கு பிறகு மாநிலத்தில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்பது தெரிய வரும்.