தி.மு.க.வுடன் இணைந்து செயல்படத் தயார்: திருமாவளவன்

சென்னை,

தி.மு.க.வுடன் இணைந்து செயல்படத் தயார் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார்.

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின்போது அதிமுக, திமுக அணிகளுக்கு எதிராக மக்கள் நலக்கூட்டணி அமைத்து, அதன் சார்பாக தேர்தலை எதிர்கொண்டார் திருமாவளவன். பின்னர் மக்கள் நலக்கூட்டணியில் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக அதிலிருந்து ஒவ்வொரு வராக  பிரிந்து சென்றனர்.

இந்நிலையில், தி.மு.க.வுடன் இணைந்து மதவாத சக்திக்கு எதிராக போராட தயாராக இருப்பதாக  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார்.

திருப்போரூர் அருகே உள்ள பையனூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஊழலை விடவும், மது விடவும் கொடியது வகுப்புவாத வெறி. மதவாத அரசியலை வேரோடு களைய வேண்டிய தேவை இருக்கிறது. எனவே தி.மு.க.வுடன் இணைந்து மதவாத சக்திக்கு எதிராக போராட தயாராக இருக்கிறோம்.

நாங்கள் எந்தவித குறிப்பிட்ட சமூகத்துக்கும் எதிரானவர்கள் இல்லை. ஆகவே தலித் அல்லாத அனைத்து தரப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து பொறுப்புகளை பெறலாம்.

வகுப்புவாத அரசியலை எதிர்த்து களம் காண வேண்டிய சூழல் நிலவுகிறது. அதற்கேற்ப தோழமை கட்சிகளுடன் இணைந்து செயல்படும் நிலை ஏற்பட்டால் கண்டிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.