வேலூர்:

லகிரி மலையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரை மர்ம நபர்கள் கடத்திச்சென்று ரூ.50 லட்சம் கொடுக்குமாறு அவரது குடும்பத்தினரை மிரட்டி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் அருள்

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள அத்தனூர் பகுதியை சேர்ந்தவர் அருள் (45). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவருக்கு பல்வேறு மாவட்டங்களில்  பலருடன்  ரியல் எஸ்டேட் தொடர்பாக தொடர்பு உண்டு.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வாக்கிங் சென்ற அருள் வீடு திரும்பவில்லை. அவரை காரில் வந்த மர்ம கும்பல் தலைமீது துணி போர்த்தி காருக்குள் இழுத்துபோட்டுக்கொண்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த சில நிமிடங்களில் அருளின் மகன் ராபினுக்கு மர்ம நபர்கள் போன் மூலம் தொடர்பு கொண்டு, ரூ.10 லட்சம் கொடுத்தால் அவரது தந்தையை விடுவிப்பதாக மர்மநபர்கள் கூறிவிட்டு செல்போனை துண்டித்தனர்.

இதை அறிந்த அருள் குடும்பத்தார் 10 லட்சம் பணத்தை தயார் செய்துகொண்டு இருக்கும் வேளையில் மீண்டும் தொலைபேசியில் மர்மநபர்கள் ராபின் ஐ தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது அருளை விடுவிக்க ரூ. 50 லட்சம் பணம் கொடுத்தால் மட்டுமே உயிருடன் விடுவிப்பதாக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்தார் அருளின் மனைவி சாந்தி என்பவர் ஏலகிரிமலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை அறிந்த ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் பழனி திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேலு என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின்பேரில் டிஎஸ்பி தங்கவேலு தலைமையில் 3 தனிப்படை அமைத்து அருளை கடத்தி சென்ற மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட செல்போனின் டவர் லொகேஷனை கொண்டு ஆந்திர மாநிலம் குப்பம் பகுதிக்கு போலீசார் சென்று முகாமிட்டு தொழிலதிபர் அருளை கடத்தி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஏலகிரி மலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.