அனாதை சவங்களை அடக்கம் செய்யும் காரணம் – மனம் திறக்கிறார் முதியவர் முகமது ஷெரீப்..!

அயோத்தி: பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வுசெய்யப்பட்ட முகமது ஷெரீப் என்ற சமூக சேவகர், தான் ஆயிரக்கணக்கான உடல்களை அடக்கம் செய்து வருவதற்கான தூண்டுகோல் எது என்பதைக் கூறியுள்ளார்.

தற்போது உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் வசித்துவரும் முகமது ஷெரீப்புக்கு 80 வயதாகிறது. அவர் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை வைத்திருந்தார்.

இவர் இந்த உன்னத சேவையை கடந்த 27 ஆண்டுகளாக செய்து வருகிறார். தான் எதற்காக இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறார் என்பதை இவரே கூறுகிறார்.

“கடந்த 1993ம் ஆண்டு சுல்தான்பூருக்கு வேலைக்கு சென்ற எனது மகன் கொலை செய்யப்பட்டார். ஆனால், அந்த தகவல் எனக்கு ஒரு மாதம் கழித்தே தெரிய வந்தது.

எனவே, எனது மகனை ஆதரவற்றவர் என எண்ணி காவல் துறையினர் அடக்கம் செய்துவிட்டனர். அந்த சம்பவம்தான், இந்தப் பணியை செய்யத் தூண்டியது” என்று மனம் திறக்கிறார்.

இவர், இதுவரை இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் என 25000க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சவங்களை உரிய முறைப்படி தன் சொந்த செலவில் அடக்கம் செய்துள்ளார். இந்த அதிசய மனிதருக்கு ஒரு சல்யூட்..!