தமிழகத்தில் மாவட்டங்கள் பிரிப்பு : ஒரு ஆய்வு

சென்னை

தமிழகத்தில் மாவட்டங்கள் பிரிக்கப்படுவதன் காரணங்கள் குறித்த ஒரு ஆய்வு இதோ.

சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் அளித்தார். இது போலப் பல பெரிய மாவட்டங்கள் இரண்டு  அல்லது மூன்றாகப் பிரிக்கப்படுவதாக அறிவிப்புக்கள் ஜனவரி முதல் வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் விழுப்புரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டது. அதன் பிறகுச் சென்ற மாதம் செங்கல்பட்டு மாவடம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு திருநெல்வேலி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டது.

தமிழகத்தில் தற்போது 32 மாவட்டங்களுள்ளன. தற்போதுள்ள மாவட்டங்களில் அளவில் பெரியதாக உள்ள மாவட்டங்களில் இருந்து பலர் அரசின் திட்டம்  முழுமையாக தங்களுக்குக் கிடைக்க புதிய மாவட்டங்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். ஒரு புதிய மாவட்டம் உண்டாகும் போது அந்த மாவட்டத்தின் தலைநகர் அருகில் அமைகின்றது. அதனால் மக்கள் அதிக தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை மாறுகிறது. வருவாய்த் துறை எல்லைகள் சுருக்கப்படுகின்றன. அத்துடன் முன்னேற்றத் திட்டங்களும் விரைவில் நடைபெறுகின்றன.

இதற்கு முன்பும் இவ்வாறு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அரியலூர், திருப்பூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் இவ்வாறு பிரிக்கப்பட்டவை ஆகும். ஆனால்  ஐந்து புடிய மாநிலங்கள் அமைந்தது குறித்து எட்டு மாதங்களுக்குள் அடுத்தடுத்து அறிவிப்புக்கள் வந்தது இதுவே முதல் முறையாகும். நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையைப் பிரித்து புதிய மாவட்டம் ஆக்க வேண்டும் என அங்குள்ள வர்த்தகர்கள் மூன்று நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். அரசு இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.

புதியதாக ஒரு மாவட்டம் உருவாகும் போது அரசு பல உள்கட்டமைப்பு பணிகள் செய்ய வேண்டி உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட  காவல்துறை சூப்பிரண்ட் அலுவலகம் மற்றும் பல துறைகளுக்கான அலுவலகங்கள் அமைக்க வேண்டி உள்ளது. அந்த மாவட்டத்துக்கு ஒரு புதிய ஆட்சியர், மற்றும் காவல்துறை சூப்பிரண்ட் உள்ளிட்ட பலரைப் பணி அமர்த்தி அவர்களுக்குத் தங்குமிடம் உள்ளிட்டவற்றையும் அளிக்க வேண்டி உள்ளது.