டில்லி:

‘‘உலகில் விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்து கொள்வது கிடையாது. பல்வேறு காரணங்களால் பல தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர்’’ என்று மத்திய பிரதேச பாஜக அமைச்சர் பால்கிருஷ்ண பண்டிதர் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை 21 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் புருசோத்தமன் ரூப்லா கடந்த மார்ச் 20ம் தேதி லோக்சபாவில் தெரிவித்தார்.

இந்நிலையில் அம்மாநில அமைச்சர் பால்கிருஷ்ணா பட்டிதார் கூறுகையில், ‘‘தற்கொலைக்கு பின்னால் இருக்கும் காரணங்கள் யூகத்தின் அடிப்படையில் தான் கூறப்படுகிறது. யார் தான் தற்கொலை செய்து கொள்ளவில்லை?.

தொழிலதிபர்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர். போலீஸ் கமிஷனர் கூட தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது சர்வதேச பிரச்னை. தற்கொலை செய்து கொண்டவருக்கு தான் உண்மையான காரணம் தெரியும். நாம் யூகிக்க தான் முடியும்’’ என்று தெரிவித்துள்ளார். இவரது பேச்சு விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.