ஜாம்ஷெட்பூர்

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ரகுபர்தாஸ் சுயேச்சை வேட்பாளரிடம் தோல்வி அடைந்ததன் பின்னணி குறித்த தகவல்கள் இதோ.

நடந்து முடிந்த ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக தோல்வி அடைந்து ஆட்சியைப் பறி கொடுத்தது.   குறிப்பாக ஜார்க்கண்ட் மாநில முதல்வரான ஜாம்ஷெட்புர் கிழக்கு தொகுதி பாஜக வேட்பாளர் ரகுபர் தாஸ் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் சரயு ராய் இடம் 15833 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.   இது ரகுபர் தாஸ் ஆதரவாளர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கியது.

தேர்தலுக்கு முன்பு வரை பாஜகவில் இருந்தவர் சரயு ராய் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.   இவர் பாஜக  அமைச்சரவையில் அமைச்சராகப் பணி புரிந்தவர் ஆவார்.   இவர் ஆளும் பாஜக அரசின் ஊழல்கள் குறித்து வெளிப்படையாக பேசி வந்தார்.   இது பாஜக மாநிலத் தலைமைக்கு கடும் அதிருப்தியை அளித்தது.   அந்த அதிருப்தி வேட்பாளர் பட்டியலில் வெளியானது.

இந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 4 வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.   அதில் நான்காம் பட்டியல் வெளியாகும் வரை சரயு ராய்  போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.   அதையொட்டி அவர் தலைமையிடம் தனக்கு வாய்ப்புக் கோரி கொஞ்சப்போவதில்லை எனத் தெரிவித்து சுயேச்சையாகப் போட்டியிடத் தீர்மானம் செய்தார்.

சரயு ராய் ஏற்கனவே முந்தைய முதல்வர்களான லாலு பிரசாத் மற்றும் மது கோடா மீது பல ஊழல் புகார்களை எழுப்பி அவர்களைச் சிறைக்கு அனுப்பியவர் ஆவார்.   அவர் தற்போதைய பாஜக அரசின் ஊழல்கள் குறித்து ஊடகங்களில் தகவல் அளித்த போதே அவருக்கு தேர்தல் வாய்ப்பு கிடைக்காது என ரகுபர் தாஸ் மிரட்டியதாக ஏற்கனவே தெரிவித்துள்ளார்.   ஆயினும் அவர் தொடர்ந்து பாஜக அரசின் ஊழல்களை பட்டியலிட்டு வந்தார்.

சரயு ராய் சுயேச்சையாக வேட்பு மனுத் தாக்கல் செய்ததில் இருந்து பல ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் அவருக்கு வந்து உதவத் தொடங்கி உள்ளனர்.  குறிப்பாக ஆர் எஸ் எஸ் துணை இயக்கமான சுதேசி ஜாக்ரண் மன்ச் தொண்டர்கள் இவருக்குப் பிரசாரம் செய்து வந்துள்ளனர்.   அவருக்குத் தேர்தல் சின்னம் நவம்பர் 21 ஆம் தேதி ஒதுக்கப்பட்டது.    அப்போது பல மூத்த பாஜக தலைவர்கள் இவருக்குக் கொடி, பானர்கள் உள்ளிட்டவை அச்சடிக்க உதவியதாகவும் கூறப்படுகிறது.

ஜாம்ஷெட்பூர் நகரின் இரு தொகுதிகளிலும் பாஜகவின் மீது தற்போது கடும் அதிருப்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.  இந்த இரு தொகுதிகளிலும் பாஜக எவ்வித முன்னேற்ற பணிகளையும் செய்யவில்லை என மக்கள் குறை கூறி உள்ளனர். குறிப்பாகச் சுகாதார நலம் குறித்துப் பல புகார்கள் அளித்தும் அரசு அதை  கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.   எனவே மக்களில் பலர் முதல்வர் ரகுபர் தாஸுக்கு எதிராகத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்

சரயு தாஸ் வெற்றிக்கு அவர் உழைப்பும் முக்கிய காரணமாக உள்ளது.  காலை அவர் நகரப் பூங்காவில் நடைப்பயிற்சி செய்யும் போதே மக்களைச் சந்திக்கத் தொடங்கி உள்ளார்.  காலை 9 மணிக்குப் பிரசாரத்தைத் தொடங்கும் அவர் முதலில் குடிசை பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களின் குறைகளைக் கேட்பது வழக்கமாகும். இதன் மூலம் அவர் மக்கள் நடுவில் புகழ் பெற்றுள்ளார்.

ரகுபர் தாஸ் ஆதரவாளர் ஒருவர், “முதல்வர் இந்த தொகுதியில் தோல்வி அடைவார் என ஓரளவு நாங்கள் எதிர்பார்த்தோம்.  ஆனால் மிகச் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் அவர் தோல்வி அடைவார் என நம்பினோம்.   ஆனால் அவர் 15000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது எதிர்பாராத ஒன்றாகும்” எனக் கூறி உள்ளார்.