அசாம் மாநிலத்தில் தேனீர் விருந்தை புறக்கணித்த காங்கிரஸ் : விவரங்கள் இதோ

வுகாத்தி

சாம் சட்டசபை பட்ஜெட் தொடரின் புகைப்படம் எடுக்கும் நிகழ்வையும் தேநீர் விருந்தையும் காங்கிரஸ் புறக்கணித்தது.

அசாம் சட்டசபையின் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் சமீபத்தில் நடைபெற்றது.    அதை ஒட்டி குருப் போட்டோ எடுப்பதும், தேநீர் விருந்தும் நடைபெற்றது.    முதல் நாள் அன்று நிகழ்ந்த ஆளுனர் உரையின் போது அதற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.    அத்துடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வையும் தேநீர் விருந்தையும் காங்கிரஸ் புறக்கணித்தது.

இது குறித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் கலீக், “சட்டசபையில் புதியதாக காவி வண்ணம் பூசப்பட்டுள்ளது.   அத்துடன் காவிக் கலரிலும் பச்சைக் கலரிலும் சட்டசபை வளாகத்தில் கூடாரங்கள் அமைக்கப்பட்டன.   இவை இரண்டும் பாஜக வின் கட்சிக் கொடியில் உள்ள வண்ணங்கள்.     இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே நாங்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் தேநீர் விருந்தில் கலந்துக் கொள்ளவும் மறுத்துள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அசாம் சட்டமன்ற சபாநாயகர் ஹிதேந்திர நாத் கோஸ்வாமி, “எனக்கு இது பற்றி முன்னமே தெரியாது.  நான் சட்டசபை வளாகம் வந்த போது தான் இதை கவனித்தேன்.   உடனடியாக நான் அந்த கூடாரங்களை அகற்றக் கோரினேன்.   யார் மனதையும் நான் புண்படுத்த விரும்பவில்லை”  என தெரிவித்துள்ளார்.

முன்னாள் அசாம் முதல்வர் தருண் கோகாய், “இந்த தேநீர் விருந்தில் பத்திரிகையாளர்களை சட்டசபைக்கு வெளியில் அமர்த்தியும் உறுப்பினர்களை உள்ளே அமர்த்தியும் தேநீர் விருந்து அளிக்க திட்டமிடப்பட்டிருந்தது.   பத்திரிகையாளர்களை அவமதிப்பதை நாங்கள் விரும்பவில்லை.   எங்கள் புறக்கணிப்புக்கு அதுவும் ஒரு காரணம்.    தற்போது அரசை ஆர் எஸ் எஸ் நடத்தி வருகிறது.    முதல்வர் நடத்தவில்லை.   அதனால் ஆர் எஸ் எஸ் சட்டசபையை ஆக்கிரமிக்க முயலுகிறது”  என கூறி உள்ளார்.