முசாபர்பூர்

பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் பல குழந்தைகள் நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்ததற்கான காரணம் வெளியாகி உள்ளது.

பீகார் மாநிலத்தில் முசாபர்பூர் நகரில் பரவிய மூளைக் காய்ச்சல் காரணமாக சுமார் 200 குழந்தைகள் மரணம் அடைந்தன.   அத்துடன் 100 குழந்தைகளுக்கு மேல் அபாயகரமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இது போல நிகழ்வு ஒவ்வொரு கோடைக்காலத்திலும் பீகாரில் நிகழ்வது வழக்கமாகி உள்ளது. இதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.

பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் லிச்சி என்னும் ஒரு பழம் கோடைகாலத்தில் விளைகிறது.  சீனாவை தாயகமாக கொண்டுள்ள இந்த பழம் சதை மற்றும் விதை ஆகிய இரு பாகங்களாக உள்ளன.  இந்த பழத்தின் விதையில் ஹைபோகிளிசின் என்னும் அமினோ அமிலம் அதிகம் உள்ளது.  இந்த அமிலம் உடலில் உள்ள குளுகோசை குறைக்கும் சக்தி உள்ளது.   திடீரென குளூகோஸ் குறைவதால் குழந்தைகளின் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.

சமீபத்திய ஆய்வுகள் மூலம் இந்த அமினோ அமிலம் விதைகளில் மட்டும் இன்றி சதை பகுதிகளிலும் ஊடுருவி உள்ளது தெரிய வந்துள்ளது.  எனவே இந்த பழத்தை சாப்பிடுவோர் மூளை பலவீனம் அடைந்து மூளைக்காய்ச்சல் போன்ற தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.   குறிப்பாக 15 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு அதிகம் உண்டாகிறது

இந்த நோய் தாக்கம் உணவு உட்கொண்டு நீண்ட நேரம் கழித்து இந்த பழத்தை உண்ணும் குழந்தைகளுக்கு  உடனடியாக ஏற்படுகிறது.    பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் உள்ள குழந்தைகள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக உள்ளனர்.    அதனால் அவர்களுக்கு விரைவில் இந்த தாக்குதல் ஏற்படுகிறது.   வறுமையின் காரணமாக பல நேரங்களில் இந்த குழந்தைகள் இந்த பழத்தை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்கின்றனர்.

எனவே இந்த லிச்சி பழங்களை முழு உணவாக குழந்தைகளுக்கு அளிக்கக் கூடாது என அரசு சுகாதாரத்துறை பெற்றோர்களுக்கு அறிவுரை அளித்துள்ளது.  அத்துடன் இந்த பழங்களை மிக மிக குறைவாகவே குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.    ஆனால் அரசின் இந்த அறிவுரையை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளாததால் இந்த நோய் பரவி மரணம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.