மாஸ்கோ

விசாரியன் என அழைக்கப்படும் ஏசுவின் மறுபிறவி எனக் கூறப்படும் செர்கோய் டோரொப் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டது குறித்த விளக்கம்

கடந்த 1961 ஆம் வருடம் ஜனவரி மாதம் தெற்கு ரஷ்யாவில் உள்ள கிரசனோடர் என்னும் ஊரில் செர்கோய் அனடோலிவிட்ச் டோரொப் என்பவர் பிறந்தார்.  முதலில் அவர் சோவியத் ராணுவத்தில் பணி புரிந்தார்.  அதன் பிறகு மினுசின்ஸ்க் என்னும்  இடத்தில் போக்குவரத்து அலுவலராகப் பணி புரிந்தார்.  கடந்த 1989 ஆம் வருடம் அவர் பணி இழந்தார்.  அதன் பிறகு தன்னை விசாரியன் அதாவது ஏசு கிறுஸ்துவின் மறுபிறவி எனச் சொல்லிக் கொண்டார்.

டோரொப் 29 வயதை அடைந்த போது சோவியத் யூனியன் உடைந்தது.   இதனால் பல உள்நாட்டு மத வளர்ச்சி உண்டானது.   கடந்த 2013 ஆம் வருடம் வெளியான ஒரு தக்வலின்படி ரஷ்யப் பிற்போக்கு தேவாலயம் 4000க்கும் மேல் பட்ட மதங்கள் ரஷ்யாவில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.   அவ்வகையில் டோரொப் சோவியத் யூனியன் பிரிவுக்கு பிறகுத் தனது மதப் பிரிவை வளர்க்கத் தொடங்கினார்.

ஏசுவின் மறுபிறவி எனச் சொல்லப்படுவதால் டோரொப் எப்போதும் நீண்ட தலைமுடி மற்றும் தாடியுடன் வெண்ணிற அங்கி அணிந்து வாழ்ந்து வந்தார்.   அவர் கடைசி ஏற்பாடு என்னும் 12 அத்தியாய நூல் ஒன்றை வெளியிட்டு அதன் மூல தனது மதப் பிரிவின் கொள்கைகளை தெரிவித்தார்.  கடந்த 1991 மார்ச்சில் இருந்து மத  போதனை செய்து வரும் அவர் முன்னாள் சோவியத் யூனியனில் இருந்த பல நாடுகளுக்கும் சென்று வரத் தொடங்கினார்.   கடந்த 1995 இல் உருவான அவரது மதப்பிரிவு தேவாலய கடைசி ஏற்பாடு என அழைக்கப்பட்டது.

டோரொப் எழுதிய கடைசி ஏற்பாடு என்பது ரஷ்யப் பழங்கால தேவாலயம் மற்றும் புத்த மத கொள்கைகளை உள்ளடக்கியதாகும்.   அவருடைய பிரிவைப் பின்பற்றுவோர்  அவரை ஏசுவின் மறுபிறவி என முழுவதுமாக நம்பத் தொடங்கினர்.   சுமார் 4000 முதல் 5000 தொண்டர்கள் அவர் கூறியதை முழுமையாகப் பின்பற்ற ஆரம்பித்துள்ளனர்.  இவர்கள் ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் யூனியன் பகுதிகளில் மட்டுமின்றி ஜெர்மனியிலும் இருந்தனர்

விசாரியனின் மதப்பிரிவு, பல பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தி வந்தன.  அவர்கள் டோரொப் பிறந்த 1961 ஆம் ஆண்டை முதல் ஆண்டாக கொண்டு புதிய நாள்காட்டியைப் பின்பற்றி வந்தனர்.   அவரது மதப்பிரிவில் இணைவோர் கெட்ட வார்த்தைகள், புகையிலை மற்றும் மதுபானம் உபயோகப்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.   மேலும் பண ஆதாயம் கொண்ட நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டன.

ஆனால் விசாரியன் தனது தொண்டர்களுடன் மிகக் குறைந்த நேரமே இருப்பார்.  அவர் ஒரு மலையின் உச்சியில் அனைத்து வசதிகளுடன் கொண்ட பங்களாவில் வசித்து வந்தார். அவருடைய தொண்டர்களை பொதுவாக அவரது உதவியாளர்கள் மற்றும் போதகர்கள் மட்டுமே சந்தித்து வந்தனர்.  டொரோடோ உல்கின் பல நாடுகளுக்கும் சென்று மக்களை மதம் மாற்றி வந்தார்.  தனது தொண்டர்களிடம் நிறைய பணம் வசூல் செய்து அதைத் தாராளமாகச் செலவு செய்து வந்துள்ளார்.

டோரொப் திடீரென ரஷ்யக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது அவரது தொண்டர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.  இது குறித்து ரஷ்ய காவல்துறை அதிகாரிகள் டோரொப் தன்னை ஏசுவின் மறுபிறவி என அழைத்து பலரிடம் பண மோசடி செய்துள்ளதாகவும்.  அவர் தமது தொண்டர்களுக்கு உடல்ரீதியாக மற்றும் மன ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகவும் விளக்கம் அளித்துள்ளனர்    அவருடன் அவருடைய சீடர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.