ண்டியானா

ரப்பான் பூச்சிக் கொல்லிகள் பலவற்றால் அப்பூச்சிகளை அழிக்க முடியாததன் காரணம் குறித்து ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.

உலகெங்கும் கரப்பான் பூச்சிகளின் தொல்லை ஒரு தொடர்கதையாகவே உள்ளது. இந்த பூச்சிகளின் மூலம் பல நோய்கள் பரவுகின்றன. அத்துடன் இவை வீட்டில் எந்த பகுதியிலும் காணப்படுகிறது. மூலை முடுக்கு, இண்டு இடுக்குகளில் ஒளிந்துக் கொண்டு இரவு நேரங்களில் வெளியில் வந்து அமர்க்களம் செய்கின்றன. இவைகளை முழுமையாக அழிப்பதென்பது முடியாத காரியமாக உள்ளது.

இது குறித்து புர்டியூ பலகலைக் கழகம் இண்டியானா மற்றும் இலினாய்ஸ் பகுதிகளில் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில், “இந்த கரப்பான் பூச்சிகள் தொல்லை கிராமப்புறம் மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்கள் வசிக்கும் பகுதிகளில் அதிகம் உள்ளது. இதற்குக் காரணம் இந்த பகுதிகளில் இந்த பூச்சிகளுக்கு எளிதாக உணவு கிடைப்பதாகும். இவைகளை கட்டுப்படுத்துவது மருந்தால் மட்டும் ஆகாத ஒன்றாகும்.

கரப்பானை கொல்லும் பூச்சி மருந்துகள் பலவிதமான ரசாயனப் பொருட்களைக் கொண்டதாகும். இந்த ரசாயனங்களால் மரணம் அடையும் கரப்பான் பூச்சிகளின் அடுத்த தலைமுறை இந்த ரசாயனத்தை எதிர்க்கும் சக்தியை அடைந்து விடுகின்றன. அதனால் இந்த பூச்சி கொல்லிகள் பலவித ரசாயனங்களை பயன்படுத்தி தயார் செய்யப்படுகின்றன. ஒரு ரசாயனம் தவறினாலும் அடுத்த ரசாயனத்தால் இவைகள் கொல்லப்படலாம் என்னும் எண்ணத்தில் இவை தயார் செய்யபடுகின்றன.

ஆறு மாதங்கள் நடந்த இந்த ஆய்வில் மூன்று வகையில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. பலவகை ரசாயனங்கள் கொண்ட பூச்சி மருந்துகள் ஓரு இடத்தில் பயன்படுத்தப்பட்டன. இரண்டாம் இடத்தில் இரு பூச்சி கொல்லி மருந்துகள் கலந்த கலவை பயன்படுத்தப்பட்டன. இவை இரண்டும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றப்பட்டன. மூன்றாம் இடத்தில் குறைந்த சக்தி உள்ள மருந்து ஆறு மாதம் முழுவதும் பயன்படுத்தப்பட்டன.

இதில் ஒவ்வொரு முறை கரப்பான் பூச்சிகள் அழிந்து மீண்டும் அடுத்த தலைமுறை தோன்றும் போது நடத்தப்படும் ஆய்வில் இந்த மருந்துகளை எதிர்க்கும் சக்தி கரப்பான் பூச்சிகளிடம் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம் பலவித ரசாயனக் கலவைகள் கொண்ட மருந்துகள் தரும் அதே பலனை குறைவான சக்தி கொண்ட மருந்துகளும் தருகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது.

பெண் கரப்பான்கள் மூன்று மாதத்துக்கு ஒரு முறை 50 முட்டைகள் இடும் திறன் கொண்டவைகள் ஆகும். ஆகவே ஒரு கரப்பானுக்கு மருந்து எதிர்ப்பு சக்தி இருப்பினும் அவைகள் மூலம் இதே சக்தி உடைய 50 கரப்பான் பூச்சிகளை மூன்று மாதத்தில் உருவாக்க முடியும். அடுத்த முறை இந்த கரப்பான் பூச்சிகள் வேறு வகை ரசாயன பூச்சிக் கொல்லிகளை எதிர்க்கும் சக்தியை பெற்று விடும் போது அந்த சக்தியுடன் கூடிய புதிய கரப்பான் பூச்சிகள் உருவாகின்றன்” என கூறப்பட்டுள்ளது.