” குரங்குகள் தொல்லை அளித்தால் அனுமனை வணங்கி மந்திரம் உச்சரியுங்கள் “ – யோகி ஆதித்யநாத் புது யோசனை

குரங்குகள் தரும் தொல்லைகளை சமாளிக்க ஹனுமரை வணங்கி மந்திரம் உச்சரிக்க வேண்டும் என உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இந்த புது யோசனை மூலம் யோகி ஆதித்யநாத் பலரது விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.

monkey

பாஜக ஆளும் மாநிலமான உத்திரப்பிரதேசத்தின் முதலமைச்சரான யோகி ஆதித்யநாத், மதுராவில் உள்ள பிருந்தாவன் பகுதிக்கு சென்றிருந்தார். அங்கு உத்திரப்பிரதேச மாநிலத்தின் சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் யோகி பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு பிறகு அவரை சந்தித்த அப்பகுதி மக்கள் மதுராவில் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருவதாக புகார் தெரிவித்தனர்.

இதனை கேட்ட யோகி அவர்களுக்கு புதிய யோசனை ஒன்றை வழங்கினார். இது அனைவரது விமர்சங்களையும் பெற்றுள்ளது. அப்பகுதி மக்களுக்கு யோகி கூறிய யோசனையில், “ பஜ்ரங்பலியை (ஹனுமர்) அன்றாடம் வணங்கி அவர் மீதான மந்திரத்தை ஓதுங்கள். குரங்குகள் உங்களுக்கு என்றுமே தொல்லை தராது “ எனத் தெரிவித்தார்.

மேலும், தனக்கும் குரங்குகளுடன் ஏற்பட்ட ஒரு அனுபவத்தை யோகி பகிர்ந்து கொண்டார். அதில் அவர், தாம் மடாதிபதியாக இருக்கும் கோரக்நாத் கோயிலுக்கு குரங்குகள் வருவதாகவும், அவை தனது மடியில் அமர்ந்து தாம் கொடுப்பதை உண்டு மகிழ்ந்து சென்று விடும் என கூறினார்.

மதுராவில் ரூபாய் 350 கோடிக்கான நலத்திட்டங்களை யோகி தொடங்கி வைத்தார். அதில், பிருந்தாவனில் 10 ஏக்கர் நிலம் விலங்குகளுக்காக ஒதுக்குவதாக யோகி அறிவித்தார். இந்த நிலங்கள் பசுக்கள் மற்றும் குரங்குகளின் புகலிடமாக அமைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பிருந்தாவனில் உள்ள ஒரு கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் மூக்குக் கண்ணாடியை குரங்குகள் பிடுங்கிக் கொள்வது வழக்கமாக உள்ளது. இதைப் பணயமாக வைத்து பக்தர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளிடம் உணவைப் பெற்றுக் கொள்கிறது. இதனால், அங்கு வருபவர்கள் தம் மூக்குக் கண்ணாடிகளை பத்திரப்படுத்தும்படி எச்சரிக்கப்படுவது உண்டு.

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒருமுறை மதுரா சென்ற போது அவரது மூக்குக் கண்ணாடியையும் குரங்குகள் பறிக்க முயன்றன.