டில்லி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தவறுகள் நடைபெறுவதாக எழும் புகார்களுக்கு முன்னாள் அரசு அதிகாரிகள் குழு  தேர்தல் ஆணையத்துக்கு ஆலோசனை அளித்துள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தவறுகள் நடைபெறுவதால் முறைகேடுகள் நடைபெறுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் தொடர்ந்து புகார் கூறி வருகின்றன.   அத்துடன் மீண்டும் வாக்குச் சீட்டு முறை வாக்கெடுப்பு தேவை எனவும் அக்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து வருகின்றன.

இது குறித்து ஆராய 73 முன்னாள் அரசு அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.     இந்த குழுவில் நிருபமா மேனன் ராவ், நரேந்திர சிசோதியா, அருணா ராய் உள்ளிட்ட பல முன்னாள் ஐ ஏ எஸ்,  ஐ பி எஸ்  மற்றும் ஐ எஃப் எஸ் அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர்.   இவர்கள் இது குறித்து ஆராய்ந்து தேர்தல் ஆணையத்துக்கு அளித்த பரிந்துரைகள் நேற்று வெளியாகி உள்ளன.

அந்த பரிந்துரையில். “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்பது விமானத்தில் உள்ள கருப்புப் பெட்டிகள் போன்றவை ஆகும்.   தாங்கள் அளித்த வாக்குகள்  சரியாக பதிவு செய்யப்பட்டதா என்பதை வாக்காளர்களால் அறிந்துக் கொள்ள முடியாது.   அதனால் தான் வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரத்தை வாக்குப் பதிவு இயந்திரத்துடன் உபயோகிக்கும் முறை அமுலுக்கு வந்துள்ளது.

இந்த வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரம் ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடனும் இணைக்கப்பட்டால் மின்னணு வாக்கு இயந்திர முறைகேடுகள் பற்றிய புகார் முழுவதுமாக குறைந்து போகும்.   அத்துடன் வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு ஒப்புகை சீட்டு பதிவுகளையும் சரி பார்ப்பதன் மூலம் முறைகேடுகள் நடந்துள்ளனவா என்பது புலனாகும்.

எனவே வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இணைப்பது அவசியமாகும்.   அத்துடன் வாக்கு எண்ணிக்கையின் போது ஒப்புகைச் சீட்டு பதிவுகளையும் சரி பார்க்க வேண்டும்.    குறிப்பாக ஒரு தொகுதியில் சமமான பலம் பொருந்திய வேட்பாளர்கள் இருந்தால் அந்த தொகுதியில் முறைகேடு குறித்த புகார்களை களைய இதுவே சரியான முறை ஆகும்.

இது மின்னணு வாக்குப் பதிவு முறைக்கும் வாக்குச் சீட்டு வாக்குப் பதிவு முறைக்கும் உள்ள வித்தியாசம்  குறித்த ஆலோசனை என நாங்கள் நினைக்கவில்லை.   நாங்கள் மின்னணு வாக்கு இயந்திரத்தின் நம்பகத் தன்மையை மேம்படுத்த அளிக்கும் ஆலோசனை என்றே கருதுகிறோம்.  இதை சரிவர க்டை பிடித்தால் வாக்குச் சீட்டு முறை தேவை இல்லை.” என முன்னாள் அதிகாரிகள் தெரிவித்துள்ள்னர்