மதுரை:

வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்வது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க தேர்தல் ஆணைய வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

தமிழகத்தின் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரி 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா கள்ளிப்பட்டு ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஆனந்தன் உள்பட சிலர் உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அதில்,  ஆளும் கட்சியை சேர்ந்த வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக, வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே, வாக்கு எண்ணிக்கையின் போது வெளிப் படைத்தன்மையை உறுதி செய்ய வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்து அதை வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வெளியில் இருப்பவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. விவாதத்தின்போது, வாக்கு எண்ணிக்கையை ஏன் வீடியோ பதிவு செய்ய முடியாது என தேர்தல் ஆணைய வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ஏன் முடியாது என்று  கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கில் மாநில தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் ஆஜராக உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை சிறிது நேரத்துக்கு ஒத்திவைத்தார்.

பின்னர் நடைபெற்ற வாதங்களின்போது, வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவுசெய்ய வேண்டும் என்று ஏற்கனவே விதிமுறைகள் உள்ளதாக சுட்டிக்காடிய நீதிபதிகள், இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க தேர்தல் ஆணைய வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.