ராமேஸ்வரத்தில் கண்டிபிடிக்கப்பட்ட தோட்டாக்கள் அமெரிக்கா – இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டவை!  

ராமேஸ்வரத்தில்  பறிமுதல் செய்யப்பட்ட தோட்டாக்கள், அமெரிக்கா மற்றும் லண்டனில் தயாரிக்கப்பட்டவை என்ற தகவல் காவல்துறையினரின் முதல்கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது.

ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் பகுதியில் உள்ளது அந்தோணியார்புரம் கடற்கரை பகுதி. இங்கே எடிசன் என்ற மீனவர் தனது வீட்டில் கழிப்பறை அமைக்க பள்ளம் தோண்டினார். அப்போது பிளாஸ்டிக் பேப்பரால் சுற்றப்பட்ட பெட்டிகள் கிடைத்தன.

 

உடனே அவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தலைமையில் பெட்டிகளை திறந்து பார்த்தனர். அவற்றில் ஏ.கே.47 உள்ளிட்ட நவீன ரக துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள், ராக்கெட் லாஞ்சர்கள், வெடிகுண்டுகள் போன்றவை இருந்தன. கைப்பற்றப்பட்ட அனைத்தும் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் எனக் கூறப்படுகிறது.

குவியல் குவியலாக தோட்டாக்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள் அமெரிக்கா மற்றும் லண்டனில் தயாரிக்கப்பட்டவை என்றும், இவை 1983ஆம் ஆண்டிலிருந்து 1985ஆம் ஆண்டிற்குள் தயாரிக்கப்பட்டவை என்ற தகவல் காவல்துறையனரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குண்டுகள் கைப்பற்றப்பட்ட அந்த இடம் 1983 – 1984 ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் ஆயுதப் பயிற்சிகள் நடத்திய இடம் என்பது குறிப்பிடத்தக்கது.