தமிழ்நாட்டிற்கு நல்ல செய்தி – கொரோனா தொற்றுவோரைவிட குணமடைவோர் அதிகம்!

சென்னை: செப்டம்பர் மாதம் துவங்கியதிலிருந்து, தமிழகத்தில், ஒவ்வொரு நாளும் தொற்றுக்கு உள்ளாவோரைவிட, குணமாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

தற்போதைய நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 50000 என்ற எண்ணிக்கைக்கும் கீழே இறங்கியுள்ளது. கடந்த ஜூலை மாத மத்தியிலிருந்து, இந்த நிலைக்கு வருவது இதுவே முதன்முறை என்று கூறப்பட்டுள்ளது.

புனேவை எடுத்துக்கொண்டால், அந்நகரில் மட்டும் 75000 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆகஸ்ட் மாத இறுதிவரை, கொரோனா வைரஸ் தொற்றும் நபர்களின் எண்ணிக்கையில், மராட்டியத்திற்கு அடுத்து தமிழ்நாடு இரண்டாவது மாநிலமாக இருந்தது. தற்போது, அந்த இடத்தை ஆந்திரப் பிரதேசம் பிடித்துக்கொண்டது.

கடந்த ஆகஸ்ட் 1 முதல், ஒருசில நாட்களைத் தவிர, தமிழ்நாட்டில், தினசரி தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை 5500 முதல் 6000 என்ற அளவில் இருந்து வருகிறது.

தற்போது, தொற்றுவோரைவிட, குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதானது, ஒரு நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது.