ரெட் அலட்ர்ட் எதிரொலி: அதிகாரிகளுடன் தலைமைசெயலாளர் கிரிஜா அவசர ஆலோசனை

சென்னை:

மிழகத்தில் வரும் 7-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம், சென்னை வானிலை மையம் போன்றவை  ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து, தலைமை செயலாளர் கிரிஜா வைத்திய நாதன்  உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

தற்போது,  கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து வரும் சூழலில்,  தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்றி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இந்த மேலடுக்கு சுழற்சி, அடுத்த 24 மணி நேரத்தில்  குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகி, அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது.

இந்த மேலடுக்கு சுழற்சி  காரணமாக  கேரளாவில்  இன்று  முதல்  4 நாட்களுக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல, தென்மேற்கு வங்க கடலில்  மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என்றும்,இந்த ழை  3 நாட்களுக்கு  நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதன் காரணமாக வரும் 7ந்தேதி 25 செ.மீ. அளவுக்கு  (ஞாயிற்றுக்கிழமை) கனத்த மழை பெய்யும் என்றும் எச்சரித்து உள்ளது.

இதையடுத்து தமிழக பேரிடர் மேலாண்மை இயக்குனர் சத்திய கோபால்  அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முன்னெச் சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டு உள்ளார்,

அதைத்தொடர்ந்து  பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை, பேரிடர் மேலாண்மை துறை  உயரதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

கனமழை காரணமாக, மக்களுக்கு தேவையான நிவாரண முகாம்கள், மக்கள் பாதுகாப்பான இடங்கள் மற்றும் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில்  மின் இணைப்புகளை முன்கூட்டியே துண்டிக்க வேண்டும் என்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறி உள்ளார்.

அதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை மாநிலம் முழுவதும் உள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதில், தமிழகத்தில் உள்ள அணைகளை பொறியாளர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அணைக்கு வரும் நீர் வரத்து மற்றும் நீர் வெளியேற்றத்தின் தகவல்களை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறி உள்ளது.

மேலும், கனமழை காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி கரை உடைப்பு ஏற்பட்டால், உடனடியாக சரிசெய்ய 5 லட்சம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி