மிக கனமழை பெய்ய வாய்ப்பு: வரும் 7ம் தேதி தமிழகத்தில் ’ ரெட் அலர்ட் ‘ அறிவிப்பு

மிக கனமழை காரணமாக தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்குமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

cyclone

தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் (5-ந்தேதி) குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் இது புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் வரும் 7-ம் தேதி அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சுமார் 25 செ.மீ அளவு மழை பெய்யும் என பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குனர் சத்திய கோபால் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கும்படியும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பேரிடர் மேலாண்மைத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறைந்த நேரத்தில் மிக அதிகளவு கனமழை பெய்வதையே ரெட் அலர்ட் என அழைக்கப்படுகிறது. வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என்பதால் மக்கள் அபாயகரமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட போது மிக கனமழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக வருகிற 7ம் தேதி தமிழகத்தில் 25செ.மீ. அளவில் கனமழை பதிவாக வாய்ப்புள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 7ம் தேதி வானிலை மிகவும் மோசமாக காணப்படும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளதால் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

அடுத்த இரு நாட்களுக்கு மிககனமழை பெய்ய வய்ப்பு உள்ளதால், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.