ரெட் அலர்ட் வாபஸ்  : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மிழ்நாட்டுக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் திரும்பப் பெறப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது.

இதன் காரணமாக வருகிற திங்கட்கிழமை வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

குறிப்பாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் (நீலகிரி, கோவை, தேனி, கன்னியா குமரி) கனமழை பெய்யும் என்று ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மேலும் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில், மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேரிடர் ஏற்பட்டால் அப்போது அதிகாரிகள் செயல்படும் விதம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மக்களுக்கும் சில அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் நாளை அதிகனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் , “மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள பகுதிகளில் நாளை அதி கனமழை எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுகிறது. நேற்று உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வலுவான குறைவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே இடத்தில் நீடிக்கிறது. குமரிக்கடல், லட்சத்தீவு பகுதிகளுக்கு இன்று முதல் 8ம் தேதி வரை மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம். ஆனால் ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்படுகிறது” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆகவே தமிழகத்தில் நிலவி வந்த பதட்டம் தணிந்துள்ளது.